புதன், ஜூலை 03, 2019

நகரில் தனித்தலையும் ஆடு

நகரில் தனித்தலையும் ஆடு

நகரம் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. மாவட்டத்தை தன் பெயரோடு சேர்த்தி வைத்திருந்த நகரமது. நேரம் நள்ளிரவு தாண்டி விட்டது. மொய் மொய்யென இரவு விளக்கு கம்பங்களின் அருகில் சிறு வண்டுகள் இன்னமும் பறந்தபடியே தானிருந்தன. இரண்டாமாட்டம் சினிமா முடிந்து கிளம்பிய எல்லா வாகனங்களும் தங்கள் கூடடைந்து போன நேரத்தில் தான்  நகரின் வீதியில் அந்த ஆடு தட்டுப்பட்டது.

தன்னைச் சுற்றிலும் இருளைப் போர்வையாய் போர்த்திக் கொண்டு நிதானமாய் நகரின் பிரதான சாலையில் காலடி வைத்த அந்த ஆடு பூட்டிக்கிடக்கும் ரெடிமேட் ஆடையகத்தை அன்னாந்து ஒருமுறை பார்த்து விட்டு சாலையைக் கடந்து சிக்னல் இருக்கும் பக்கமாக சாலையோரமாக சென்றது. திருப்தியான குதூகலம் மிக்க நடையல்ல அது. அந்த ஆடு தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கலாம், இந்த நகரம் இப்போது தன் கட்டுப்பாட்டில் நிம்மதியாக இருக்கிறதென!

லோடு ஏற்றிய லாரிகள் இரண்டு முனகிக் கொண்டு சாலையில் சென்றன. டீக்கடையொன்றின்  முகப்பில் கிடந்த கட்டிலில் போர்வைக்குள் கிடந்த உருவம் கால்களை எதற்காகவோ அசைக்கையில், சரியாக ஆடு டீக்கடை முகப்பைத் தாண்டுகையில் ஒரு கணம் நிதானித்து பார்த்து விட்டு தன் பாதையில் சென்றது. சிக்னல் விளக்குகள் இரவிலும் தங்கள் பணியைச் செய்து கொண்டுதான் இருந்தன. ஐந்து பாதை சந்திப்பு அது. வேறு நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அந்த இடத்தில் தான் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துச் செல்கின்றன.

சாலையை ஒட்டியிருந்த நீளமான சுவற்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் முழுக்கடையடைப்பு நாள் பற்றியான தகவல்களைத் தாங்கிய புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவைகளின் கஞ்சி வாசம் இன்னமும் ஆறவில்லை. அருகிலேயே வர்ணமயமாய் புதிய ஆடையக திறப்பு சுவரொட்டிகளும், எம்.ஜி.ஆர் முன்னெப்போதோ கத்தி வீசி நடித்த அடிமைப்பெண் சுவரொட்டியும் நடந்து வந்து கொண்டிருந்த ஆட்டினை ஈர்த்தன.

நகரின் சுவர்களில் இப்போதெல்லாம் புதிய படங்களின் சுவரொட்டிகளை எங்குமே காணமுடிவதில்லை. திரைத்துறை ஸ்தம்பித்து நிற்கிறது என்றும், புதிய படங்களின் சூட்டிங்குகள் வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கின்றனவென்றும் தகவல்களை தினசரிகள் சொல்லுகின்றன. நகரில் சில திரையரங்குகள் தங்கள் காட்சிகளை நிறுத்திக் கொண்டன என்றும் தகவல்கள் ஒருமாத காலமாக வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரமில்லாமல் டீயை அவசரமாய்க் குடித்து விட்டு சாலையோர பேக்கரிகளிலிருந்து பிழைக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.

திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு என்றும், கோபியில் வாகன விபத்தில் மூன்று பேர் பலி என்றும், காதலனுடன் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி தஞ்சம் என்றும் வழக்கமான செய்திகளையே அவர்கள் வாசித்துக் கொண்டிருக்க, கமல்ஹாசனின் மையம் பற்றியும், அவரே அடுத்த முதல்வர் என்று அவரே கூறிக் கொள்வதாயும், ரஜினிகாந்த் ஒரு சந்தர்ப்பவாத கன்னடக்காரர் என்றும் ஒவ்வொரு நகரங்களிலும் மக்கள் கூடிக் கூடி பேசியபடி கலைந்து கொண்டு தானிருந்தார்கள். புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வராதது பற்றி ஒரு வாரம் மட்டுமே குசுகுசுத்துக் கொண்டவர்கள் அடுத்ததாக பேசுவதற்கு அரசியலை எடுத்துக் கொண்டார்கள்.

எப்போதும் போல தன்னுடைய அடுத்தபடம் வெளியாகிவிடுமென்ற நம்பிக்கையில் அதிரடி செய்திகளை மீடியாவுக்கு வழங்கிய ரஜினிகாந்த் கொட்டகை அதிபர்களின் போராட்டத்தால் தொய்ந்து போய் காணாமலாகி காணாமலாகி அவ்வப்போது மைக்குடன் காட்சியளிப்பதாக நகரின் கழிப்பறைக்குள் பக்கத்து பக்கத்து அறைக்குள் மூலம் என்கிற அவஸ்தையில் சிரமப்பட்ட இருவர்கள் பேசிக் கொண்டதை யூரின் மட்டுமே இரண்டு ரூபாய் கொடுத்துப் போனவன் காதில் கேட்டு, கோபி செல்லும் பேருந்தில் ஏறி பயணிகளுக்கு உரக்கச் சொன்னான்.

தன் ஊருக்கு சொன்ன நேரத்தில் தலைவன் வரலையென்றும், வரவே மாட்டானென்றும் தெரிந்து கொண்ட தொண்டர்கள் குட்டான் கூடி சதியாலோசனை செய்து தலைவன் கும்பிடு போட்டு நிற்கும் மிக உயர்ந்த ப்ளக்ஸ்களை டார் டாராய் கிழித்து நிம்மதிப்பட்டு டாஸ்மார்க் பாரில் சென்று அமர்ந்து கொண்ட தகவல்களை மீடியாக்கள் உரத்துக் கூறிக் கொண்டிருந்தன. காக்கிசட்டை மீது கைவைப்பது கண்டனத்திற்கு உரியதென்று தலைவன் கூற, மைந்தன் ஒத்தையில தான் திரியணுமென சேதிகள் அலைபேசி வாயிலாக சென்று கொண்டேயிருந்தன நகரமெங்கும்!

அடிமைப்பெண் சுவரொட்டியை சுவைத்து மென்று தீர்த்த அந்த ஆடு அடுத்து ஆடையக சுவரொட்டியில் வாய் வைத்து மேலிருந்து கீழாக இழுத்துக் கிழித்து சுவைத்து மென்றது. ஒவ்வொரு இரவிலும் பசிக்காக சுவரொட்டிகளை மட்டுமே உண்டு வாழும் அந்த ஆடு எப்போது இந்த நகருக்குள் நுழைந்தது என்று யாருக்கும் தெரியாது.

நகரின் கறிக்கடை வீதியில் கடை போட்டிருக்கும் சிலருக்கு இந்த ஆட்டின் மீது கண் தான். கிட்டத்தட்ட முப்பது கிலோவுக்கும் பக்கமாக வெட்டிக் கூறு போட்டால் வந்து விடும் ஆடு அது. ஆனால் ஆட்டை அவர்களால் பிடிக்கவே முடியாதது தான் அவர்களுக்கான சோகம். மூன்று பேர் முட்டுச் சந்தில் நின்று மசை நாயை துரத்தியோடிக் கொல்வது போன்றெல்லாம் ஆட்டின் மீது அவர்கள் தங்களின் செயலூக்கத்தை காட்டிவிட முடியாது. அது நாய். இது ஆடு.

மதிப்பிற்குரிய இந்த ஆடு சமூக வலைதளங்களில் கூட நகரில் வலைதளத்தில் சேவையாற்றும் சிலரால் புகைப்படம் பிடிக்கப்பட்டு, ’எங்கள் நகரின் ஆடுஎன்று வசனமெழுதிப் போட்டு ஐநூறு விருப்பக்குறிகள் என்று வாங்கியும், வாவ்! ஆடு சூப்பர் நண்பா! என்கிற தோழமையின் கருத்துக்களையும் பெற்று மகிழ்ந்து சோறு உண்டார்கள். இதுபற்றியெல்லாம் அறியாத ஆடு வயிற்றுத் தேவையை முன்னிட்டே பின் இரவுக் காலத்தில் நகரில் சுற்றியது.

சொல்லடி பட்டாலும் கண்ணடி படல் கூடாது என்பது போல பகல் வேளைகளில் இந்த ஆடு எங்கே செல்கிறதென கறிக்கடைக்காரர்கள் நகரத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் சல்லடை வைத்து அலசியும் தேடிக் கண்டறிய முடியாமல் போகவே சாக்கடைக்குள்லெல்லாம் தேடி ஓய்ந்தார்கள். கடைசியாக அவர்கள் ஆட்டை சந்தித்தது நகரின் புளுகிராஸ் ஆபிஸின் எதிரில் உயர்ந்து நின்றிருந்த வேப்பை மரத்தின் நிழலடியில். ஆட்டிற்கு அவ்ளோ அறிவா? என்று அவர்கள் பேசிக் கொண்டே தங்களின் கறிக்கடைக்கு டிவிஎஸ் ஐம்பதுகளில் பயணித்தார்கள்.

ஆட்டிற்கோ தன் எதிர்க்கே இருக்கும் குட்டி அலுவலகம் தன்னை சீண்டவே விடாத அலுவலகம் என்பதெல்லாம் தெரியாது. நகரின் மறுகோடியில் எல்லா மரங்களும் அழிந்த பிறகு கண்ணிற்குத் தட்டுப்பட்ட இந்த ஒரே மரத்தடியில் நிழலுக்காக அது வந்து உடலைச் சாய்த்துப் பழகி விட்டது. தன்னை யாரோ ஒருவர் இந்த மரத்தோடு சேர்த்து நீண்ட கயிறு கொண்டு பிணைத்திருக்கிறார்கள் என்று அதுவாகவே நினைத்துக் கொண்டிருக்கலாம்.

புல் தானாகவே வளருகிறது என்று ஒரு தாடிவைத்த அழகான பெரியவர் சொல்லிச் சென்றிருந்தார். இந்த நகரில் புல் தானாகவே அழிந்து விட்டதை அவருக்குச் சொல்லலாமென்றால் அவர் செத்து வருடங்களாகி விட்டது. ஆக புல் என்பது ஒரு அதிசயப் பொருளாக அந்த ஆட்டுக்கு ஆகிவிட்டது. மனிதனுக்கும் அரிசி என்பது அப்படியே ஆகிவிடலாமென பேச்சாய்ப் பேசுகிறார்கள். எப்போதேனும் தலைவர் அழைக்கிறார் என்று லாரியில் முன்னூறு ரூவாய் பணமும் ஒரு கோட்டர் பாட்டிலும் வாங்கிக் கொண்டு ஏறிய குக்கிராமத் தொண்டன் நகர வீதியில் அவன் ஆசைகொண்ட பீட்ஷாவைத் தின்ன கடை தேடி அலைவது போல புல்லைத் தேடி அலைந்தது அந்த ஆடு.

கிராமத்தில் நீரில் ஊற வைத்த ரேசன் அரிசி சாப்பிட்டுப் பழகிய ஆடுகள் கூட எப்போதேனும் மழை பெய்த காலங்களில் புற்களை தின்ன வாய்ப்புக் கிட்டி விடும். கிராமத்து ஆடுகள் காகிதங்களை சாப்பிடுவதில்லை தான். தங்கள் எஜமானர்கள் எதுவுமே தீனிக்கு ஏற்பாடு செய்யாத காலங்களில் அவர்களையே தின்றுவிடும் வெறி கொண்ட ஆடுகள் தான் கிராமத்தின் ஆடுகள். ரேசன் அரிசி சாப்பிட்டு உடல் வளர்த்த ஆடுகள் நகரங்களில் வெட்டப்பட்டு கிலோ ஐநூறு ரூபாய்க்கு கறிவிசுவாசிகளுக்குச் சென்று சேர்கிறது. ‘இது ஆட்டுக்கறியா?’ என்கிற கேள்வி அவர்கள் மனதில் விழுந்து விட, விசுவாசிகள் கடல் மீனென்றும், ஆற்று மீனென்றும் போய் விடுகிறார்கள்.

ஆடு தனக்குப் போதும் என்கிற அளவில் சுவரொட்டிகளை தின்று விட்டு கிளம்பலாம் என்று பார்த்த சமயத்தில் நகரின் காவல்துறை வாகனம் மிக மெதுவாக ஊர்ந்து கொண்டு சிக்னல் அருகில் வந்து ஓய்ந்தது. வாகனத்தின் மேல்புறத்தில் சிவப்பும் நீலமும் கலந்த விளக்கு விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பலராமன் கையிலிருந்த கருவி கர்ப்புர் என்றும் சில தமிழ் வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டிருக்க வாகனத்தை விட்டு இறங்கி தன் பேண்ட்டை பெல்ட்டோடு சேர்த்து மேலேற்றினார். பின்னாலேயே இறங்கிய கான்ஸ்டபிள்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பத்தாம் நெமபர் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு உச்சா போக தோதான இடம் பார்த்தனர்.

கந்தசாமி.. அங்க நின்னுட்டு நம்மை பாக்குறது பொது மக்களோட நாய்களை குதறி எறியுற வினோத விலங்கா?” என்றார் தினத்தந்தி செய்தி போலவே பலராமன். பேண்ட் ஜிப்பை கீழிறக்கிக் கொண்டிருந்த கந்தசாமி அவர் சுட்டிக் காட்டிய வினோத விலங்கை பார்த்து முறுவலித்தார்.

சார் கண்ணாடியை மாட்டிட்டு பாருங்க சார்! அது ஆடு

ஆடா? என்னப்பா இது பெருசா இருக்கே மாடாட்டம்? போய்ப் புடிச்சா பார்ப்பம். ஸ்டேசன்ல எல்லோருக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்என்றார். தமிழை ஓரளவு புரிந்து வைத்திருந்த ஆடு கறிக்கடைக்காரர்கள் பேசுவது போன்ற தோரணையான பார்வையில் இன்ஸ்பெக்டர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து மெதுவாக சாலையில் இறங்கியது. அதற்குத் தெரியும். இந்த மனிதர்கள் கொஞ்சமும் கருணையற்றவர்கள் என்று.

ஏப்பா கந்தசாமி, ஆடு நைசா கிளம்பப் பாக்குதப்பா.. ஓடிப் பிடிச்சா போஎன்று இன்ஸ்பெக்டர் சொல்லுகையில் கந்தசாமி ஆட்டை நோக்கி சாலையில் ஓட ஆரம்பித்திருந்தான். ஆடு நாலுகால் பாய்ச்சலில் ஏதோவொரு பெருநகரம் நோக்கிச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்து ஓட்டமெடுத்தது. குரூரபுத்தி கொண்ட கந்தசாமி ஆடு தனக்கு விடும் சவாலாக நினைத்து வக்கிரமான புன்னகையோடு ஆட்டைத் துரத்த ஆரம்பித்தான். வேகவைக்கப்பட்ட ஆட்டின் விரைகளும், கண்ணா முழிகளும் அவன் விரும்பிச் சாப்பிடுபவை. ஈரல் சாப்பிடுவதிலும் கெட்டிக்காரன்.

இத்தனை நாட்களாக இந்த நகரில் ரோந்து சுற்றியும் கண்ணுக்கு அகப்படாத ஆடு இன்று விசேசமாக பட்டிருக்கிறதென்றால் அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டதாகத்தானே அர்த்தம்! திருட்டு நாய், திருட்டுக் குரங்கு வரிசையில் இதுவும் திருட்டு ஆடு தான். திருட்டு நடைபெறாமல் தடுப்பதும் திருடியவனிடமிருந்து பிடுங்கிக் கொள்வதும், ஹெல்மட் அணியாமல் குடும்பம் சகிதமாய் செல்லும் எவனையும் துரத்தியேனும் பிடித்து கட்டி வைத்து மிதிப்பதும் காவல்துறையின் கடமை.

ஆடு கந்தசாமிக்கி போக்கு காட்டி வேறுநகரம் நோக்கியெல்லாம் ஓடத் துவங்கிவிடவில்லை. அதற்கு இந்த நகரின் வீதிகள் மட்டுமே அத்துபடி. இந்தச் சந்தில் நுழைந்தால் எங்கு போகலாம், முட்டுச் சந்து எங்கு வரும் என்பதெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நகர ஆடு. கந்தசாமி கேருக் கேருவென ஆட்டைத் துரத்தி வந்தவன் திடீரென மாயமான ஆட்டை நின்று தேடினான். ஆட்டுக்கும் இரவில் ஓடி விளையாடும் ஆட்டம் பிடித்திருக்கும் போல!

கான்ஸ்டபிள் கந்தசாமி பின்தங்கி விட்டான் என்பதையுணர்ந்த ஆடு வேறொரு சந்திலிருந்து எட்டிப் பார்த்து தனக்கென இருக்கும் சின்ன வாலை ஆட்டி அந்த இரவில் முதலாக மேஏஏஎன்று சப்தமிட்டது. கந்தசாமி மீண்டும் கண்பார்வையிலிருந்து தவற விட்டு விட்ட ஆட்டை முழுதாகப் பார்த்தான். இது கசாப்புக்கடைக்கு வந்த பிதிர்கெட்ட ஆடு அல்லவென்பதை உணர்ந்து மீண்டும் ஒரு முயற்சியாக அதை நோக்கி ஓடினான். ஆடு பக்கத்திலிருந்த சந்தில் நுழைந்து தெருநாய் ஒன்றைக் கண்டு நிதானித்தது.

நகரில் சுற்றும் பல தெருநாய்களுக்கு இந்த ஆட்டைத் தெரியும் பல மாதங்களாக. அவைகளில் சில இதை குரைத்தும் மிரட்டியும் பார்த்து ஆட்டின் முன்னங்கால்களால் மிதி வாங்கிக் கொண்டு ஊளையிட்டு ஓடியிருக்கின்றன. அப்படி முன்பே முன்னங்கால் மிதி வாங்கிய நாயாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். இந்த ஆட்டைக் கண்டதுமே பீதியில் தலைதெறிக்க வந்த வீதியிலேயே திரும்பி ஓடிற்று. அப்படி பீதியில் ஓடும் நாயைக் கண்ட கந்தசாமி ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு சிக்னல் நோக்கிச் செல்லும் சந்தில் நடக்க ஆரம்பித்தான். ஆடு மீண்டும் மேஏஏஎன்று சப்தமிட்டது. கந்தசாமிக்கு அந்த சப்தத்தைக் கேட்க தன் தோல்வி உறுத்தியது. கடைசியாக இன்ஸ்பெக்டரிடம் வந்து சேர்ந்த கந்தசாமி, ‘அது ஆடில்லீங்க சார்.. மானு வகையைச் சேர்ந்தது!’ என்றான்.

ஆட்டிற்கு நாளாக நாளாக நகரில் எதிரிகள் அதிகமாயினர். தியேட்டர் அதிபர்கள் தங்களின் விளம்பர சுவரொட்டிகளை ஆடு தின்றுவிடுகிறதென காவல் நிலையம் சென்று ரிப்போர்ட் மேல் ரிப்போர்ட் கொடுத்தனர். அதிகாரிகள் ஆட்டின் மீது ஒரு ஸ்டெப் போட தாமதிக்கிறார்கள் என்று தாங்களே கூலிப்படையை அமைத்தனர். கூலிப்படை தடிகளோடு ஆட்டைத் தேடி நகர வீதியில் அலைந்தனர். கூடவே கூலி வாங்காமல் கறிக்கடைக்காரர்களும் தடிகளோடு அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய் துப்பாக்கியோடு நகர வீதியில் இரவானதும் புல்லட்டில் சுற்றினார்.

வலைதளங்களில் சேவையாற்றும் சிலர் தங்கள் பக்கங்களில் புளுகிராஸ்என்ன செய்கிறது? என்றும், ‘ஆடு தப்பிப் பிழைக்குமா சமூக விரோதிகளிடமிருந்து?’ என்றும், ‘வாயில்லா ஜீவனை வதைப்பதே மனிதனுக்கு வேடிக்கையான வாடிக்கையாகப் போய்விட்டதுஎன்றும் விருப்பக்குறிகளின் மீது ஆசை கொண்டு மீண்டும் ஆட்டின் புகைப்படத்தைப் போட்டு ஒரு கொந்தளி கொந்தளித்து விட்டு மனைவி செய்த ரசம் சூப்பர் என்று பக்கத்து இருக்கையாளரிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். சாய்கோணமாக இருக்கும் பூமியை முட்டி மோதி நிமிர்த்தி விடுவார்கள் இவர்கள் என்று வெறுத்த சில வலைதள நண்பர்கள் ஆடு பற்றி தகவல் போட்ட நண்பர்களை நட்பிலிருந்து அகற்றி விட்டு முனியாண்டி விலாஸ் சென்று சிக்கன்ஃப்ரை சாப்பிட்டார்கள்.

புளுகிராஸ் என்ன செய்கிறது? என்று கேட்ட வலைதள நண்பரிடம் புளூகிராஸ் சார்பாக எந்தத் தகவலும் அவன் பக்கத்தில் பதியப்படாமல் போகவே, உள்ளூர்க்காரி ஒருத்தியின் புகைப்படத்தைப் போட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழிஎன்று பதிவிட்டான்.

இப்படியாக நகரின் செய்திச் சேனல் ஒன்று பொதுமக்களிடம் ஆடு பற்றியான தகவல்களைக் கோர்த்து ஒருமணி நேரம் ஓட்டி மகிழ்ந்தது. “அது மாரியம்மன் கோவில் ஆடுங்க, அதுக்கு யாரு சிரமத்தைக் கொடுத்தாலும் ஆத்தா கண்ணைப் பிடுங்கிடுவா” “மனுசனக் கடிச்சு, மாட்டக் கடிச்சு கடெசியா ஆட்டையும் கடிக்கப் போறானுங்களா? அரசாங்கம் செரியில்ல! எதிர்கட்சி என்ன பண்டுது?” என்று தூள் கிளப்பினார்கள் பொது மக்கள். ‘நான் ஆட்டைப்பத்தி பத்து நிமிசம் பேசியிருக்கேன் நெலா டிவில.. மூனு மணிக்கி ஒளிபரப்புறாங்க பாரு மாப்ளெ!’ என்று எவனோ மாமன் எவனோ மாப்பிள்ளைக்கி போன் போட்டுக் கொண்டிருந்தான் நகர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு. நகரின் சேனல் செய்த நல்ல காரியம் ஒன்று இருந்தது.

புளுகிராஸ் அலுவலகம் முன்பாக வேப்பை நிழலில் படுத்துக் கிடந்த ஆட்டுக்கு வெளியூரிலிருந்து வெட்டிக் கொண்டு வந்திருந்த கிலுவைமர இலைகளை புளுகிராஸ் அலுவலக வாட்ச்மேன் கொடுக்க ஆடு அவன் கையிலிருந்து வவக் வவக்கென பிடுங்கித் தின்னும் காட்சி தான். ஆக புளூகிராஸ் அலுவலக வாசலில் வைத்து சம்பவத்தை நடத்த முடியாத கூலிப்படை ஆட்கள் தருணத்தை எதிர்பார்த்து வீதியில் திரிந்தனர். ‘உங்களுக்கு குடுத்த பணம் வேஸ்டு!’ என்று தியேட்டர் அதிபர்கள் அவர்களை அலைபேசியில் கடிந்தார்கள். மீடியாவின் பார்வை ஆட்டின் மீதே இருப்பதால் இந்த சமயத்தில் ஆட்டுக்கு ஒன்றென்றால் அத்தனை பேரும் கம்பி எண்ணப் போக வேண்டியது தான்.. என்றுணர்ந்த கூலிப்படை அன்றிரவே ஊரைக் காலி செய்து வேறு நகரம் போய் விட்டது.

விசயம் இப்படியிருக்க ஆடு நிஜமாகவே நகரிலிருந்து காணாமல் போய் விட்டது. காவல்துறைக்கு அனாசின் மாத்திரை வில்லைகளும், ஜெண்டு பார்ம் டப்பிகளும் அதிகம் தேவைப்பட்டன. தலைநகரில் இருக்கும் மிகப்பெரிய செய்திச் சேனல் ஊழியர்களும் நகர வீதியில் கேமராவோடும் கையில் மைக்கோடும் அலைய ஆரம்பித்தார்கள். சிக்னல் பகுதிகளில் ஆடு காணாமல் போன தினத்திலிருந்து விபத்துகள் நடக்க ஆரம்பித்து விட்டன. சுவரொட்டிகள் அனைத்தும் சுவற்றில் பளிச்சென முழுசாய் இருந்தன.

காணாமல் போன ஆடு எங்கே? தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் இந்த நகரை நோக்கியே இருந்தது. ரஜினிகாந்தும் கமலஹாசனும் இந்த சமயத்தில் அமைதி காத்தார்கள். ’புளுகிராஸ்காரர்களே மட்டன் பிரயாணி போட்டு விட்டார்களா?’ என்று உள்ளூர் தோழிக்கு வாழ்த்துச் சொல்லி பதிவேற்றிய வலைதளப் போராளி கேள்வியைக் கேட்டு விட்டு முட்டை போண்டா சாப்பிட மலையாளத்தான் கடைப்படி ஏறினான். ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்என்றொரு பதிவை உலகை வெறுத்த ஜீவன் ஒருவர் வலைதளத்தில் பதிவேற்றி விட்டு மாட்டுக்கறி சாப்பிட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

உள்ளூர் நகரவாசிகள் தங்கள் சொந்த வீட்டிலிருந்து ஒரு குழந்தை காணாமல் போனது போல் பசியே இல்லாமலும், சோறு இறங்காமலும் தவித்தார்கள். ஆட்டை கண்டுபிடிக்கச் சொல்லி உண்ணாவிரதப் பந்தல்கள் முளைத்தன நகரின் முக்கியமான சந்திப்புகளில். அங்கு போய் உட்கார்ந்ததும் அவர்களுக்கு பசியெடுக்க ஆரம்பித்து விடவே பந்தலுக்கும் பின்னால் சிக்கன் பிரயாணி வரவழைத்து ஐந்து ஐந்து பேராய் எழுந்து சென்று சாப்பிட்டு வந்தார்கள்.

ஆட்டுப் பிரச்சனை மூன்று நாட்கள் தாண்டி நான்காவது நாளை எட்டியது. இரவு நேர தள்ளுவண்டிக் கடைகளில் ஆட்டுக்கால் சூப் குடிப்போர் யாருமில்லை என தள்ளுவண்டிக்காரன் துக்கப்பட்டான். கறிக்கடைகளில் சிக்கன் கோழிகள் மட்டும் சுத்தமாக பொங்கு பொசுக்கப்பட்டு மஞ்சள் பூசித் தொங்கின. நகரையொட்டியிருந்த குறுநகரங்களில் ஆட்டுக்கறி கிலோ ஐநூறிலிருந்து கிடுகிடுவென பெட்ரோல் விலை உயருவதுபோல எழுநூற்றி ஐம்பதுக்கு தாவியது. சிக்கன் சாப்பிடாத நகரவாசிகளில் சிலர் பேருந்து ஏறிப்போய் முக்கால்கிலோ வாங்கி வந்து சமைத்தார்கள். கொஞ்சமேனும் கொஞ்சமாய் ஆட்டுக்கறி சாப்பிட்ட நகரவாசிகள் வயிற்றில் கசமுச ஏற்பட்டு வாந்தியெடுப்பதற்காக பக்கத்து குறுநகரத்திற்கு ஸ்கூட்டரிலும் ஆட்டோவிலும் பிரயாணம் செய்தார்கள். இப்படியாக இருந்த ஒரு ஞாயிறையும் முழுதாய் தொலைத்தார்கள். இப்படி நடக்க காரணம் காணாமல் போன ஆடு நகருக்கு கொடுத்த சாபமென சம்மணம் போட்டு உட்கார்ந்து பேசினார்கள்.

நான்காவது நாளில் பக்கத்திலிருக்கும் குறுநகரத்தின் காங்கரீட் சாலை போட்ட தெருவொன்றின் வீட்டிலிருந்த திண்ணையில் ஹாயாக படுத்தபடி வாயை அசை போட்டு படுத்தபடி இருக்கும் நகர ஆட்டை வலைதளத்தில் பொதுமக்கள் பார்த்தார்கள். ஆடு கடித்து உண்ண வசதியாக ஒரு பெருங் கொத்து அகத்திக்கீரை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீடு புளூகிராஸ் அலுவலகத்தின் வாட்ச்மேன் வீடு.

ஒருவாரம் கழிந்திருக்கும், அந்த நகரம் எப்போதும் போல் நள்ளிரவில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வெறிச்சோடிக்கிடந்த நகரவீதியில் ஒற்றை மாடு நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்தது.
                                                                                                                 -உயிர்மை 2018Post Comment

ஷாராஜ் விமர்சனம்


Shahraj Strokes

மதிப்பிற்குரிய ஆடு : வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதை பற்றிய எனது வாசிப்பு அனுபவம்
********************
வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதையை (அவர் அனுப்பிக் கொடுக்க) முந்தா நாள் இரவுதான் வாசிக்க வாய்த்தது. வாசிக்க வாசிக்கவே நான் அடைந்த மகிழ்ச்சி, உற்சாகம், மன நிறைவுக்கு அளவே இல்லை. நேற்று அவருக்கு அலைபேசி அது குறித்து விரிவாகவே சொல்லி, எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டேன். இப்போது உங்களிடமும் சில முக்கிய தகவல்களை உதிரிகளாக பகிர்ந்துகொள்கிறேன்.

குறிப்பாக இந்தச் சிறுகதை என் போன்ற சக கதையாளக் கற்றுக்குட்டிகளுக்கு மிகவும் பயனளிக்கும். கதையோடிகள் குழுவில் கவியோவியத் தமிழனும் கூட ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அலசல் செய்யலாமே என்று கேட்டிருந்தார். அந்த அளவுக்கு விமர்சன ரீதியாகவோ, ஆய்வு ரீதியாகவோ நான் அணுக முற்படவில்லை. ஆனால் சமகால தமிழ்க் கதை எப்படி இருக்கிறது, இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக இக் கதையைச் சொல்லலாம். ஒரு மிகச் சாதாரணமான காட்சியிலிருந்து மிகச் சிறந்த கதையை உருவாக்குவது எப்படி என்கிற ரசவாத வித்தையை இளம் படைப்பாளிகளும், என் போன்ற போதாமைப் படைப்பாளிகளும் இக் கதையிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்.

உயிர்மை இதழில் கடந்த ஆண்டு வெளியான இக் கதையின் தலைப்பிலேயே இப்போது கோமுவின் சிறுகதைத் தொகுப்பு வாசகசாலை வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை: ரூ.130/-

தொகுப்பை நான் இன்னும் முழுதாக வாசிக்கவில்லை. எனக்கு இந்த ஒரு கதையே இப்போதைக்கு நிறைவைத் தந்திருப்பதாலும், அது பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று பட்டதாலும் இப்போது இப் பதிவு.

கதையைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். முதலாவதும் அடிப்படையுமான விஷயம் அதன் கதை. நகரத்தில் ஒரு ஆடு சுவரொட்டிகளைத் தின்று தீர்க்கிறது. இதுதான் ஒன் லைன். இதை வைத்துக்கொண்டு கோமு என்னவெல்லாம் வித்தை காட்டி, இப்படி ஒரு மாஸ்டர் பீஸைத் தந்திருக்கிறார் என்பது பேராச்சரியம். அதுதான் அவரது மாஸ்டர் மைண்ட்!

கோமுவுக்கு இது சாதாரணம். ஆனால், மற்றவர்களுக்கு அசாதாரணம்.

நகரத்தில் மாடு, ஆடுகள் சுவரொட்டி தின்பதைப் பார்த்திராதவர்கள் யாரேனும் உண்டா கதையாளப் பெருங்கூட்டத்தில்? ஆனால் அந்தக் காட்சியை வைத்துக்கொண்டு இது போன்ற அசாதாரணப் படைப்பைத் தர நம்மில் எவ்வளவு பேரால் இயலும்? நம்மில் ஒருவருக்காவது இது போல தோன்றியிருக்குமா?

கதைச் சுருக்கம் இதுதான்: வளர்ப்போர் இல்லாத ஒரு ஆடு நகரத்தில் (ஈரோடு) சுவரொட்டிகள் முழுதையும் தின்று தீர்ப்பதால் அந் நகரத்தில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன, அது திரையரங்குகள், அரசியல் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள், அதற்கு சமூகத்திலும் சமூக ஊடகங்களிலும் எந்த மாதிரியான எதிர்வினைகள் ஏற்படுகின்றன, காவல் துறையினர் என்ன செய்ய முற்படுகிறார்கள், இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

கதை நோக்கம், ஆட்டை முன்வைத்து செய்யப்படும் சமூக, அரசியல் இன்னோரன்ன விமர்சனங்களே! இதற்குள் புக இங்கே இடமும் இல்லை. வாசகர்கள் வாசிக்க வாசிக்கவே அதை அறிந்தும் கொள்ளலாம்.

கதையாக்கம் பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொல்வதெனில் “நவீன செவ்வியல்”! என்னைப் பொறுத்தவரை இது கோமுவின் சிறுகதைகளில் அதி உச்சம்.

கோமுவின் பல கதைகளிலும், கள்ளி போன்ற நாவல்களிலும் தொடக்கப் பகுதி பழைய செவ்வியல் பாணி சித்தரிப்பாக இருப்பதைக் காண்போம். சட்டெனவோ பிறகோ அது மாறி அவரது பொது இயல்புக் கதையெழுத்துத் தன்மைக்கு வந்துவிடும். இக் கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை செவ்வியல் தன்மை குறைவுபடாமல் தக்க வைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பம்சம். கோமுவின் வழக்கப்படியே இதுவும் வேகமான கதைதான். ஆனால், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு பத்திகளும் சுவை மிக எழுதப்பட்டிருப்பதாலும், நுட்பங்கள் விரவிக் கிடப்பதாலும் ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி நிதானமாக ரசித்து வாசித்தும், மறு வாசிப்பு செய்து ருசித்தும்தான் வாசித்தேன். இதுவரை கோமுவின் கதையை இந்த மாதிரி வாசிக்க நேர்ந்ததே இல்லை. அந்த அளவுக்கு செறிவும் கவித்துவமும் கொண்ட மொழி நடை, பல வகை ஜாலத் தெறிப்புகள்.

இயல்பான கவித்துவ மொழி இக கதையில் பயிலப்பட்டிருப்பது மிக முக்கிய அம்சம். கொள்ளாதவன் வாயில கொளக்கட்டையத் திணிச்சு கொரவளையத் திருகற புனைவு மொழிவாதிகளுக்கு ஹைலி ரெக்கமண்டட்.

இக கதை உடனடியாக எனக்கு பஷீரின் ‘ஃபாத்தும்மாவின் ஆடு’ குறுநாவலை ஞாபகப்படுத்தியது. அக் கதைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் பஷீரின் நாவல்களிலேயே எனக்கு மிகப் பிடித்தமானது ‘ஃபாத்தும்மாவின் ஆடுதான். வாழ்வின் சாரம் மிக்க பகுதியை அப்படியே துண்டாக வெட்டி எடுத்து வைத்தது போன்ற கச்சிதமான படைப்பு அது. பஷீர் மனப்பிறழ்வுற்றிருந்த சமயம் அதை எழுதி முடித்தார் என்பது நம்பவியலாத ஆச்சரியம் தரக் கூடியதும் கூட.

ஜெயசூர்யா நடிப்பில் மலையாளத்தில் ஆடு என்ற திரைப்படம் இரண்டு பாகங்கள் வந்திருப்பதை தொ.கா. துணுக்குகளில் அறிந்திருக்கிறேன். எனினும் அவற்றைக் கண்டதில்லை.

ஆடு வளர்ப்பு பற்றிய ஒரு பழைய காஷ்மீரச் சிறுகதையையும் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ஆனால், அது வழக்கமான ஒரு கதைதான். அதைத் தாண்டிய தள நகர்வு அதில் இல்லை. தனக்கான உணவாக சுவரொட்டிகளைத் தேடி நகரில் தனித்தலையும் இந்த தமிழக ஆடு தனது அலைச்சலினூடே பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம்மை நமக்குள் பல் வேறு தளங்களுக்குள்ளாக தனித்து அலைய விடவும் வைக்கிறது. தமிழகத்தின் திரை – அரசியல் பண்பாடு, சுவரொட்டிக் கலாச்சாரம், ஊடக வியாபாரங்கள், போலிச் சமூக அக்கறைகள் முதலானவை நுட்பமாகவும் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் சாட்டையடியாகவும் விமர்சிக்கப்படுகின்றன. அந்த ஆட்டை வேட்டையாட யாரெல்லமோ முற்படுகிறார்கள். அவற்றிலிருந்து தப்பித்து இறுதியில் மிக இயல்பாக தக்க பாதுகாப்பை ஆடு அடைகிறது; கதையின் அடுத்த காட்சி தொடங்குகிறது.

ஒரு ஆங்கிலத் திரைப்பத்துக்கான கட்டமைப்பை இக் கதையில் நாம் காணலாம். இதைச் சொல்கையில் கோமுவின் முந்தைய ‘கொலைகார ஸ்கூட்டர்’ உடனடி ஞாபகத்துக்கு வருகிறது..

ஃபாத்தும்மாவின் ஆடு போல இந்த ஆடு கதையிலும் பரந்துபட்ட ஒரு முழுமை இருக்கிறது.

நகரில் தனித்தலைகிற அந்த ஆடு உண்மையில் ஆடுதானா, அல்லது குறியீடா? வளர்ப்போரும் மேய்ப்போரும் இல்லாத, சுவரொட்டிகளைத் தின்று வாழும் அந்த ஆடு யார்? மதிப்பிற்குரிய அந்த ஆடு நாமேதான்!திரை நடிகர்கள் அரசியல்வாதிகளாகி மக்களை ஆளவும் ஆள முற்படவுமாக இருப்பது தமிழக வரலாற்றில் தொன்று தொட்டே நிலவுகிற வழமை. அரசியல்வாதிகளோ மகா நடிகர்களாக இருப்பது உலக வழமை. திரைப்படம், அரசியல் இவ்விரு துறைகளின் ஆதாரங்களில் ஒன்றான சுவரொட்டிகளைத் தின்று வாழ்வது ஒற்றை ஆடோ, நகரத்தில் இருப்பது மட்டுமோ அல்ல. நாட்டு மக்கள் அனைவருமே அந்த ஆடுதான். ‘நானும் கிராமமும்’ (1911) என்ற தலைப்பில் மார்க் சாகல் வரைந்த பிரசித்தி பெற்ற நவீன ஓவியம் எனக்கு நினைவு வருகிறது. கிராமத்தில் ஆடும், ஆட்டுக்குள் ஆடும் இருப்பதைச் சித்தரிப்பதினூடாக ஆட்டுக்குள் கிராமமும் இருப்பதை கோடி காட்டி உணர்த்தும் ஒப்பற்ற ஓவியம் அது. இக் கதையிலும் அப்படித்தான், அந்த ஆட்டுக்குள் நாமெல்லாரும் ஆடுகளாக இருக்கிறோம். நாம் தனித்தலையவில்லை; குழு குழுவாக, கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக அலைந்துகொண்டிருக்கிறோம், நமக்கான சுவரொட்டிகளை, சின்னங்களை, கொடிகளை, பதாகைகளைத் தேடித் தின்றபடி.

Post Comment