எல்.பிராங்க்போம்
அமெரிக்க சிறார் எழுத்தாளர். மலையாளத்தில் ஜெ.தேவிகாவால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை
தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்.
மாமாவுடனும் அத்தையுடனும்
கான்சாஸ் புல் மேட்டில் சிறுவீட்டில் வாழும் சிறுமி டோரதி. அவ்விடத்தில் அடிக்கடி புயல்
காற்று வீசும். டோரதியின் தோழன் தோத்தோ எனும் நாய்க்குட்டி. புயல் நாளொன்றில் டோரதியும்,
தோத்தோவும் வீட்டோடு வானில் பறக்கிறார்கள். எங்கு செல்கிறோமென்ற குழப்பமும் பயமும்
டோரதிக்கு இருந்தாலும் ஒரு கட்டத்தில் பயத்தை துறந்து நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து
விடுகிறாள். விழித்தெழுகையில் அந்த வீடு அழகான ஒரு பிரதேசத்தில் இறங்கியிருக்கிறது.
அங்கே விசித்திர
மனிதர்களின் சந்திப்பும் நிகழ்கிறது. டோரதி தன் மாமாவிடமும் அத்தையிடமும் செல்ல விருப்பப்படுகிறாள்.
அதற்கான வழியை மரகத நாட்டில் வசிக்கும் மந்திரவாதி ஓஸை சந்தித்தால் மட்டுமே வீடு திரும்ப
இயலுமென்பதை விசித்திர மனிதர்களிடம் கேட்டறிந்த டோரதி தன் பயணத்தை துவங்குகிறாள்.
இந்த சிறு நாவல்
இங்கிருந்து ஒரு தேடலுடன் துவங்குகிறது. இடையில் தனக்கு எப்படியேனும் அறிவு வேண்டும்
என இவர்களின் பயணத்தில் ஒரு வைக்கோல் மனிதன் மந்திரவாதி ஓஸை சந்திக்கச் சேர்ந்து கொள்கிறான்.
கூடவே ஒரு தகர மனிதனும் தனக்கு இதயம் வேண்டும் என்றும் இவர்களோடு இணைந்து கொள்கிறான்.
சிறார்களுக்கான
கதைகளில் இப்படி வைக்கோல் மனிதன் என்றும் தகர மனிதன் என்றும் சேர்ந்து கொள்கையில் நிச்சயமாக
படிக்கும் சிறார்களுக்குள் ஒரு ஆர்வத்தையும் ஆச்சர்யத்தையும் உருவாக்கிவிடும் தான்.
போக வைக்கோல் மனிதனுக்கு நெருப்பு என்றால் பயம். தகர மனிதனுக்கு தண்ணீரில் நனைந்தால்
துருப்பிடித்து விடும் என்பதால் கையோடு ஒரு ஆயில் டின். நாவலின் போக்கில் சுவாரஸ்யங்கள்
சேர்ந்து கொண்டே செல்கிறது.
இவர்களின் சாகசங்கள்
நிறைந்த இந்தப்பயணக்கதை படிப்போருக்கு அலுப்பூட்டுவதில்லை. இறுதியில் டோரதியும், தோத்தோவும்
மாமாவையும் அத்தையையும் சந்தித்தார்களா? எவ்விதம் வந்து சேர்ந்தார்கள்? என்பதை சொல்கிறது
இந்த சிறார் நாவல்.
ஒரு மொழிபெயர்ப்பு
நாவலை படித்துக் கொண்டிருக்கிறோமென்ற உணர்வே ஏற்படாமல் நேரடியாக தமிழில் எழுதப்பட்ட
நாவலை வாசிப்பது போன்றே இருந்தது. தமிழில் சிறார்களுக்கென பல புத்தகங்கள் வந்திருப்பினும்
இது ஜாலங்கள் நிறைந்த கற்பனை உலகிற்கே சென்று திரும்பிய திருப்தியை சிறார்களுக்கு நிச்சயம்
கொடுக்கும்.
புக்ஸ் ஃபார் சில்ரன்
பேச :-
044-24332424, 24332924
விலை :- 90.00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக