ஞாயிறு, ஜூலை 04, 2021

கொரனா பொழுதுகள் 2012


 


கொரனா பொழுதுகள் 2012

 

மீண்டும் ஒரு வாழ்வை குட்டிச் சுவற்றினுள்

இருந்து தான் துவங்க வேண்டுமென்கிற

கருத்தை இவன் பதிவு செய்கிறான் முகநூலில்!

பத்திரமாக அதனுள்ளேயே இரு!” என்றொரு

பதிலை தூர தேச நண்பன் இடுகிறான்.

பக்கத்து ஊர் நண்பன்,

ஓட்டுப் போட்டீல்ல..அனுபவி!’

என்று பதிலிட்டு மறைகிறான்.

சம்மந்தமே இல்லாமல் வடிவேலுவின்

புகைப்படத்தையிட்டு மறைகிறது ஒரு ஃபேக்!

 

சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம்

நிச்சயமாக கழுதை மூத்திரத்தில் தான்

குஷியாய் ஓடுகின்றன! என்றொரு பதிவை

இடுகிறானிவன் நான்கு மணிநேரம் கழித்து!

திரும்பவும் நண்பர்கள் அனைவரும் ஓடி வந்து

ஆளுக்கொரு செய்தியை இவனுக்கு தெரிவித்துப்

போகிறார்கள்.

உன் மூத்திரத்திலும் அது ஓடும்!” என்று

பதிவிட்டுப் போயிருந்தான்

பக்கத்து ஊர் நண்பன்.

 

கொரனாவுக்கு ஆவிபிடித்தல் தான்

சரியான வழி! என்றொரு பதிவை இட்டிருந்தான்

பக்கத்து ஊர் நண்பன்! -அவனுக்கும்

பலர், தவறான தகவலென்றும்

சரியான தகவலென்றும் பதிலிட்டுப் போயிருந்தார்கள்.

ஒருவாரம் தொடர்ந்து ஆவி பிடிக்கையில்

விரை வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து வரும்

என பதிலிட்டு விட்டு முகநூலிலிருந்து வெளியேறினான்

இவன்.

 

 

000

 

கோழிக்கால் சூப்பை சாலையோர

வண்டிக்கடையினருகில் நின்றபடி

குடித்தவன் சொன்னான்.

ஒரு கவிதையை ரசித்தபடி ருசிப்பதாய்

இருக்கிறதென!

கஞ்சிக்கி செத்தவன் கவிதை விமர்சனம்

செய்தால் இப்படித்தானிருக்கும்.

 

 

000

 

எப்போதும் பாலத்தினடியிலேயே தான்

கிடப்பானவன்.

இரண்டு வாரங்களாய்

பாலத்தினடியில் வியாபாரம் செய்ய வரும்

இளனி, நொங்கு விற்பனையாளர்கள்

வரவில்லை! சற்றுத்தள்ளி இருபுறமும்

நின்றிருந்த தேனீர்க்கடைகளும்

அடைத்துத்தான் கிடந்தன!

 

திடீரென ஒரு ஞாயிறு அன்று பாலத்தின் வழியே

பேருந்துகளும் வாகனங்களும் செல்வது

துவங்கி விட்டது! மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு

வந்திருந்தார்கள்! படுத்திருந்தவன் எழுந்து

திறந்திருந்த தேனீர்க்கடைக்கு நடையிட்டான்!

கடையினுள் வழக்கம் போல மக்கள்

நிரம்பியிருந்தார்கள்!

வறுக்கியையே இதுவரை தின்னாதவர்

போல கடித்துக் கொண்டே டீயை

உறிஞ்சிக் கொண்டிருந்தவரிடம்,

கொரனா வியாதி போயிடுச்சுங்ளா?” என்றான்.

நாளையில இருந்து தான் முழு ஊரடங்கு!

இன்னிக்கி லீவு!” என்றாரவர்.

 

அவர் சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்ப

சொல்லிக் கொண்டே பாலத்தடி வந்தவன் தன்

இருப்பிடத்தில் சாய்ந்தான்!

நாளையில இருந்து தான் முழு ஊரடங்கு!

இன்னிக்கி ரீவு!”

 

000

 

 

யாரோ ஒருவர் எங்கள் தெருவில்

இறந்திருக்கத்தான் வேண்டும்.

பூக்களும் பொரியும் இறைந்து கிடக்கின்றன

தெருவெங்கிலும்!

எதிர்ப்படும் யாரையேனும் விசாரிக்கலாமென்றாலும்

யாருமில்லா தெருவில் யாரிடம் விசாரிப்பது?.

மயானத்தின் நிசப்தம் சூழ்ந்த தெருவில்

முதன் முதலாக பள்ளிக்குச் செல்லும்

சிறுவனின் பதட்டத்துடன் நடக்கிறேன்.

தூரத்திலிருந்து குரைத்தபடி ஓடிவந்த மணியான்

தெரிஞ்ச ஆள் தான் என்றதும் வாலை

ஆட்டிசாரி பாஸ்!’ என்று கூடவே வந்தது.

யார் போனது இன்று?’ என்று கேட்டேன்.

அந்த ஆட்டேவாரி ஹில்ஸண்ணாஎன்றான் மணியன்.

 

000

 

சிலுவையிலிருந்து இறங்கி வந்த மனிதர்

இருமியபடியே குறுநகர் நோக்கி நடையிட்டார்.

தன்னைத் தெரியாத ஒரு மனிதனை நிறுத்தி

அரசு மருத்துவமனைக்கு வழி கேட்கையில்

கனமாய் வந்த இருமலை அடக்கமுடியாமல் இருமினார்.

முதல்ல மளிகைகடையில என்னையாட்டம்

மாஸ்க் வாங்கி மாட்டிக்கிட்டு இப்பிடி தெக்கையே

போங்க பெருசு!” சொல்லிக்கடந்தவனுக்கு இவர் கூறிய

தேங்ஸ்காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லைதான்..

மருத்துவமனையின் நீண்ட வரிசையில் கடைசி

ஆளாகச் சென்று நின்றவர் முன்பாக மாஸ்க் அணிந்த

முகத்தினோடு தும்மலிட்டபடி நின்றிருந்தான் புத்தன்.

கொரனா டெஸ்ட் எடுக்க வந்தீங்களா?” என யாரும்

யாரையும் விசாரித்துக் கொள்ளவேயில்லை!

 

000

 

 

 

 


Post Comment

கருத்துகள் இல்லை: