உட்டேஞ்சவாரின்னு எடுத்த ஓட்டம்


உட்டேஞ்சவாரின்னு எடுத்த ஓட்டம்

(கெட்ட கனவுகள் வந்தால் தான் மனிதர்கள் திடீரென விழித்து நிஜத்திற்கு வருவார்கள். இன்பக்கனவாகவே மனிதர்கள் கண்டால் விழித்துக் கொள்ளவே மனம் வராது.)


அவன் எதை நோக்கியோ விருப்பப்பட்டுத்தான் அப்படி ஓடிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் முதலாக மனிதர்களிடமிருந்து தப்பிச் செல்வதே அவனது முதல் குறிக்கோளாக இருந்திருக்கலாம். அவன் இப்போதும் ஓடிக்கொண்டே தான் இருந்தான். அவனுக்கான பெயரை அவன் மறந்திருந்தான் முன்னெப்போதோ. ஆனாலும் தன்னை தம்பி என்றோ, அண்ணன் என்றோ எங்காவது யாரிடமாவது சொல்லிக் கொள்வதை வழக்கமாக்கியிருந்தான். அவனை தம்பி என்றழைப்பதில் தப்பிதமில்லை. 

தம்பி ஆற்றில் விழுந்து நீந்தியும், சேற்றில் ஊன்றி நடந்தும், காடுகளில் ஓடியும் சளைக்கவேயில்லை. மனிதர்கள் அவனை கற்களாலும், அழுகிய முட்டைகள் மற்றும் தக்காளிப்பழங்களாலும் அடித்து விரட்டியிருந்தார்கள். மனிதர்களிடம் அச்சம் கொண்டிருந்த தம்பி அவர்களைப்பார்த்து கடைசியாக கொக்காணி காட்டி காறித்துப்பிவிட்டு தன் ஓட்டத்தை இலக்கு இதுதான் என்றில்லாமல் ஆரம்பித்திருந்தான். வெயில், மழை, இரவு பாராமல் அவன் மனிதர்கள் வாசமில்லாத மற்ற விலங்கினங்களின் வாசமும் இல்லாத பகுதிக்குள் வந்து சேர்ந்திருந்தான். அவன் வந்து சேர்ந்த பகுதியெங்கும் சிவந்த நிறத்தில் வெறும் மண் குன்றுகளாயும் மணல்துகள்களாயுமிருந்தது. இனிமேல் எந்த விலங்கினங்களும் தன்னை துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்த தம்பி தன் ஓட்டத்தை நிறுத்தி நிதானமாய் சிவந்த பூமியில் நடக்கத் துவங்கினான்.

இரவு நேரங்களில் தம்பி ஊளையிடுவதை வழக்கமாக வைத்திருந்தான். நரியின் ஊளையை விட அது கொடூரமாய் இருப்பதாய் உணர்ந்த மனிதர்கள் இவனை பார்த்த இடத்திலெல்லாம் மசை பிடித்த நாயை கற்களால் தாக்குவது போன்றே நடந்து கொண்டார்கள். தம்பி மனிதர்கள் வாழும் பகுதியில் வாழ்வதற்கு தகுதியானவனல்ல என்பதை அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். காடுகளில் விலங்கினங்களோடு வாழத்தகுந்த விலங்கினம் தான் தம்பி என்றார்கள். ஆனால் தம்பியின் ஊளையானது என்றுமே இசை மயமானது. 

உலகம் முச்சூடும் சீக்கிரமாக சூன்யமாகி விடப்போகிறது என்பதை ஒலியின் மூலமாக மனிதர்களுக்கு உணர்த்த முயன்றவன் தம்பி. அவனது ஊளையை இரவில் அடித்தொண்டையிலிருந்து ரீங்காரமாய் துவங்குகையில் மனிதர்கள் தங்கள் காதுகளைப் பொத்திக் கொள்வது மட்டும் ஏனென்று தம்பிக்குத் தெரியவேயில்லை. உலகமானது சூன்யமாகப் போகிறது என்பதை முன் எச்சரிக்கையாக ஊளையிடலைத் தவிர வேறு எந்த வடிவில் மனிதர்களுக்குச் சொல்வதென தம்பிக்கும் தெரியவில்லை.

ஆனால் தம்பி ஓட்டம் பிடித்த காலத்திலிருந்து மனிதர்களுக்கு சேதி சொல்ல பயன்படுத்திய ஊளையை மறந்திருந்தான். யாருக்கும் தன் சேதிகளை சொல்ல வேண்டிய அவசியமில்லாத இடத்தை அடைந்திருந்தான் தம்பி. காலம் முழுதும் நரகத்தீயில் எரிந்து கருகும் சித்தத்துடன் இருந்தானவன். வாழ்க்கையை வாழத்தெரியாதவர்களும், வாழ்ந்து முடித்து விட்டதாய் கருதிக்கொண்டவர்களும் வந்தடையும் இடமாகவும் இந்த சிவந்தபூமி அவனுக்கு தோன்றச் செய்தது. இதுவரை ஓட்டமாய் ஓடி வந்த பயணம் தனக்கு மகிழ்ச்சியாயிருந்ததா அல்லது துன்பமாயிருந்ததா? என்றுகூட அவன் யோசிக்கவுமில்லை. வந்து சேர்ந்த இடமும் திருப்தியாயிருக்கிறதா அல்லது இல்லையா? என்றும் தெரியவில்லை. கற்கள் நிரம்பிய முகடுகளில் ஓடி வந்து கொண்டிருந்த போது கூட தன் ஓட்டத்தை அவன் நிறுத்திக் கொள்ளவேயில்லை. அவனை இடையில் எதிர்க்கொண்டோ அல்லது துரத்தி வந்தோ உணவாக்கிக் கொள்ளவும் எந்த விலங்கினங்களும் அவன் முன் தென்படவுமில்லை.

தன்னை கைநீட்டி வழிமறித்து “யாரடா நீ கிறுக்குப்பயலே? இது வழியாக எங்கே செல்கிறாய்?” என்று கேட்பதற்குக் கூட ஆள் அரவமேயில்லாத சிவந்த பாலைநிலத்தில் மணலில் கால்கள் புதைய தம்பி நடந்து கொண்டிருந்தான். போகுமிடம் தெரியாததால் வந்து சேர்ந்த இடம் பற்றியும் எதையும் யோசியாமல் நடந்தான். ஆனால் அவன் தலைக்கும் மேலாக யாரோ கிசுகிசுப்பாய் மூச்சுவிடுவது போன்றிருக்கவே, ’இங்கேயும் தொல்லை தானோ?’ என்று நடையை விரைவு படுத்தினான் தம்பி. 

அப்போது தான் அவன் கால்களையும் கவனித்தான். கால்களில் விரல்களோ, பாதமோ இல்லை. இருந்தும் அவனுக்கு வலியாய் எதுவும் தெரியவில்லை. அவனது மேல்சட்டையும் கால்சட்டையும் கூட கிழிபட்டு வால் வாலாகத்தான் தொங்கிற்று. அதுவும் தெரியவில்லை. விரைவான ஓட்டத்தில் கால்கள் தேய்ந்து கரைந்திருக்கலாமென நினைத்தான். இந்த முறை மூச்சுக்காற்று தலைக்கும் மேலாக பலமாக காதுகள் அடைத்துக் கொள்ளும்படி கேட்டது. போகவும் மணல்துகள்கள் வேறு சுழல்காற்றுக்கு பறப்பது போன்று இவன் முன்பாக எழுந்து சுழன்றது. 

தம்பி திரும்பி தலையை உயர்த்தி மேலே பார்த்தான். தம்பி தன் வாழ்நாளில் பார்த்தறியாத பூதாகரமான உருவ அமைப்புப் பெற்றவன் ஒருவன் நின்றிருந்தான். அவன் மூச்சு விட்ட போது தான் மணல் துகள்கள் பறந்து கொண்டிருந்தன. போக அந்த பூதாகரமான மனிதன் தன் முதுகில் மிகப்பெரிய பாரத்தை வேறு தாங்கிப் பிடித்த வண்ணம் குனிந்த வாக்கில் நின்றிருந்தான். 

தம்பி தனக்கும் வளர்ந்திருந்த தாடியைத் தடவிக் கொண்டே அந்த பூதாகரமானவன் தாடி நரைத்துப் போய் நீளமாய் தொங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். பூதாகர பெரியவர் அவர். அவரது கால்கள் பாறையைப் போன்று சிவந்த நிலத்தில் ஊன்றி நின்றிருந்தது. இதுவழியாகத்தானே தம்பி வந்திருந்தான். வருகையில் அந்தப் பெரியவரை எப்படி கவனிக்காமல் விட்டான்? திடீரென நிலத்திலிருந்து வளர்ந்த பெரியவராக இருக்கலாமென நினைத்தான்.

“ஹூ ஆர் யூ மேன்?” அந்தப்பெரியவரிடமிருந்து குரல் வந்த சமயம் தம்பி தன் காதுகளை கைகளால் பொத்திக் கொண்டான். அந்தக்குரல் ஒலி சிவந்த நிற பாறைக்குன்றுகளில் பட்டு எதிரொலியாய் வேறு கேட்டது. எதிரொலி முடிந்த பிற்பாடு தான் தம்பி தன் காதுகளிலிருந்து கைகளை எடுத்தான் தம்பி.

“எதுவாக இருந்தாலும் உமக்கு தமிழ் தெரிந்தால் அதில் பேசு. எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது. எதற்கு இப்படி சத்தமாகப் பேசுகிறாய்? மெதுவாய் குசுகுசுப்பாய்க் கேள் பெரியவரே! உமக்கு இந்திதான் தெரியுமெனில் எனக்குப் பின்னால் ஒரு இந்திக்காரன் இந்த இடம் வந்து சேர்ந்தால் அவனிடம் ’கியா? டி கே’ என்று தாங்கள் பேசலாம்!”

“ஆகட்டும் தம்பி, எனக்கு அனைத்து மொழிகளும் தெரியும்!”

“அதனால் தான் இப்படி அத்துவான வெளியில் பாரம் தூக்கிக் கொண்டு நிற்கிறாயா? அதுசரி என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?”

“ஆகட்டும் தம்பியா, உன் பெயர்? வேடிக்கையாய் இருக்கிறது! தமிழில் இப்படியொரு பெயரா?”

“தம்பி. இப்படித்தான் கேட்போரிடம் சொல்வேன் நான். எனக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது.”

“மும்பையில இருந்தப்பவா?”

“மும்பையில பானிபூரி கடைகூட போட்டு பிழைச்சிக்கலாம்னு யோசனை கூட நான் பண்ணியதில்லே! என்னோட இன்னொரு பேரு அண்ணா!”

“தமிழ்நாட்டுல அந்தப்பேரோட ஒருத்தரு வாழ்ந்ததைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன்! அவரு கூட மூக்குப்பொடி போடுவாராம்ல? சரி சரி கிளம்பிடாதே! நீ எங்கிருந்து இங்கு வந்து சேர்ந்தாய்? ஏன் வந்தாய்?”

“அது பெரிய கதைன்னு தான் நினைக்கிறேன். எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியல!”

“அப்ப பொன்னியின் செல்வன் மாதிரி பெரிய நாவலாச் சொல்லு! எனக்கு கேட்க நேரமிருக்கு. வெகு காலமாய் இந்தப்பாதையில் ஒரு மனிதன் கூட வரவேயில்லை. நான் மனிதனைப் பார்த்தே பல காலமாயிற்று!”

“குறுக்கே பேசுனீன்னா என் ஞாபகக்கயிறு அங்கங்கே அந்துடும். கோர்வையா சொல்ல முடியாமப் போயிடும் பாத்துக்க! நான் ஈரோடு மாவட்டத்துல இருந்து ஓட்டமா ஓடி வர்றேன். இந்த மாதிரி செவ்வா கிரகத்துக்கு நான் ஓடிவரக் காரணமா இருந்தவங்க பெண்கள் தான். பெண்கள் அப்படிங்கற வார்த்தை கூட தப்பு. சைத்தான்கள்னு தான் சொல்லணும். சைத்தான்கள் எல்லாமும் ஒரே மாதிரி தான் ஆசைப்படுதுகள். என்னேரமும் முஇத்தமிட்டுக் கொண்டே இருக்குறதை விரும்புதுகள். அடுத்த சைத்தானைப்பத்தி ஒரு சைத்தான் கிட்ட பேசினால் டூ விட்டுட்டுப் போயிடுதுகள். தனக்கே தனக்குனு எல்லாமும் எல்லா நேரமும் அதுங்களுக்கு கிடைச்சிட்டே இருக்கணுமாம். பாசம் அதிகமாயிடுச்சுன்னா ரத்த ஒழுக்கு நாள்ல கூட கையைப் புடிச்சி இழுக்கும்கள்! சைத்தான்கள் அரிப்பு அரிப்புங்கறதுக்கு வதுலா காதல் காதலு என்றே கத்துதுகள். நானோ கருமம் கருமம்னு சொல்றேன்”

“தம்பி நீ கவிதை மாதிரி பேசுகிறாய்! அதுசரி எங்கெங்கு அலைந்து திரிந்து இங்கு வந்து சேர்ந்தாய் நீ?”

“நான் அட்சரேகை வழியா வர்றேன். உலகம் சீக்கிரமாய் சூன்யமாகப் போகிறதே! ஆனால் என் அவசரத்திற்கு அது சீக்கிரமாய் நடக்க மாட்டேனென்கிறது. என் காதலெல்லாம் இப்போது சூன்யத்தின் மீது தான். சூன்யத்தின் மெளனம் என்னை ஏங்க வைக்கிறது. நான் ஒருவழியாக சூன்யத்திற்கான பாதையை கண்டுபிடித்து விட்டேனாக்கும்!”

“அது சரி, உன் நிஜப்பெயரே தம்பி தானா? இல்லை அண்ணாவா?”

“நான் எந்த ஆண்டு பிறந்தேன் என்றே தெரியவில்லை. என் பெற்றோர்கள் எனக்கு என்ன பெயரிட்டு அழைத்தார்கள் என்றும் நினைவில்லை. ஆனால் பிசிறு பிசிறாய் சில ஞாபகங்கள் மட்டுமே இருப்பது போலவும் உணருகிறேன். அது என் நினைவுகளா இல்லை அடுத்தவனின் நினைவுகளா? என்பதிலும் சந்தேகமாயிருக்கிறது. எல்லாம் இந்த சைத்தான்களால் வந்த வினை. இந்த அளவுக்கு என்னை கேனக்கூ ஆக்கியிருக்கிறார்கள்.நிஜத்தில் என்னை ஒரு வாழைப்பழசோம்பேறியாக என் தாய் ஈன்றிருக்கிறாள் போல. பள்ளி ஆசிரியர் ஒருவர் மிக சிரத்தையாய் எனக்கு ஆங்கிலம் கற்பிக்க முயன்ற போது என் டவுசரை நான் நனைத்து விட்டேன். பள்ளியில் ஆங்கிலம் எனக்கு கற்பிப்பதாயிருந்தால் அந்தப்பகுதிக்கு நான் செல்ல மாட்டேன் என்று நான் கூவிய போது என் தந்தையார் இரண்டு கிலோமீட்டர் பள்ளியிருக்கும் இடம் வரை எனது றெப்பட்டையை ஒருகையால் பிடித்து மறுகையிலிருந்த விளாரினால் சாத்து சாத்தென சாத்தியும் மண்சாலையில் உருட்டியும் இழுத்துப்போய் என் படிப்பறிவை உய்விக்கப் பார்த்தார். அதுமட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. நான் என்ன படித்தேன் என்பது இப்போது தெரியவில்லை.”

“உன்னுடைய பெற்றோர்கள், உறவினர்கள் என்று இருப்பார்களே.. அவர்களெல்லாம் எங்கே?”

“அவர்கள் எல்லோரும் திட்டிவாசல் வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு உசிதப்பட்டணம் போய்விட்டார்கள்”

“நீ ஏன் அவர்களோடு போகாமல் இங்கே வந்தாய்?”

“வர முடியாது என்று அவர்களிடம் நிதானமாக கூறினேன். எனக்கு ஒரு மறை கழண்டு விட்டதாய் அவர்கள் சொன்னார்கள். போக அந்தப் பிரயாணம் மிகக் கொடுமையானது. வழியெங்கிலும் பிசாசுகளின் நடமாட்டம் இருக்கும். எனக்கும் பிசாசுகளுக்கும் எந்த பந்தங்களும் இருந்ததேயில்லை. நானுண்டு என் சாமானுண்டு என்று வாழ்ந்தேன் போல அப்போது. நான்கைந்து கிடாய்கள், பதினெட்டு கோழிகள் அறுத்து பொங்கல் வைத்ததால் கடவுளோடு மட்டும் எனக்கு தொடர்பு உண்டு. இப்படி ஒரு அப்பாவியான தம்பியை நான் விடமுடியுமா? கப்பென பிடித்துக் கொண்டேன் இவனை!”

“அப்போ நீ தம்பி இல்லையா?”

“நான் அண்ணா! ஆமாம் வந்ததிலிருந்து என்னை கேள்வி மேல கேள்வியாய் கேட்டு நோகடிக்கிறாயே யார் நீ? நான் தான் ஒரு பிரி கழண்டவனாயிற்றே! என்னிடம் என்ன பேச்சு உனக்கு வேண்டிக் கிடக்கு?”

“சுண்டெலிப்பயலே! என்னைப்பற்றி நீ கேள்விப்பட்டதேயில்லையா? அல்லது நடிக்கிறாயா? உலகத்தில் நீ என்ன மனுசனாகத்தான் வாழ்ந்து தொலைத்தாய்?”

“ஆமால்ல! உலகத்தில் நான் என்னவாக வாழ்ந்தேன்?”

“நான் தான் அட்லாஸ்! நான் தாங்கிப் பிடித்திருப்பது தான் உலக உருண்டை. இது என்ன கனம் தெரியுமா? பொணக்கனம். இந்தப் பொணத்தை என் நினைவு தெரிந்த நாளிலிருந்து சுமந்து கொண்டேயிருக்கிறேன். கிட்டத்தட்ட ஆச்சுன்னு தான் நினைக்குறேன்.”

“அட்லாஸ்! அப்படின்னா அறுவை சிகிச்சையா? உன் பெயர் நன்றாக இருக்கிறது. உனக்கு நல்ல பெயராகத்தான் உன் தந்தையார் வைத்திருக்கிறார். பொம்பள சாமியக் கும்பிடாதே! ஆம்பிளெ சாமியா கும்பிடு. அவிங்கெல்லாம் சேர்ந்து சீக்கிரம் ஏற்பாடு பண்ணீருவாங்க! நீ போயிட்டீன்னா உலக உருண்டையும் கூவிடும்! ஆமாம் இந்த வடக்குத் திசையில் ஒரு பாதை செல்கிறதே.. இதில் நான் சென்றால் சூன்யத்திற்கு சீக்கிரம் சென்று விடுவேனா?”

“இப்படி வடக்குதிசையில் நீ சென்றாயானால் அங்கே சிசிபஸ் இருப்பான். மந்திரவாதி மாண்ட்ரெக்குக்கும், லொதாருக்கும் அவன் எதிரி. அவன் உன்னைக் கண்ட மறுநிமிடமே நீ ஒரு பிரி கழண்டவன் என்றெல்லாம் பார்க்க மாட்டான். கொன்று விடுவான்.”

“சும்மா யாராச்சிம் சும்மாநாச்சிக்கிம் கொல்லுவாங்களா? ஒரு காரணம் வேணுமில்ல! 

“ஆனா அவன் அப்படித்தான். கடவுள் அளித்த தண்டனையை அவன் சாபம் நீங்கும் மட்லும் அனுபத்துக் கொண்டிருக்கிறான். பெரிய பாறை ஒன்றை மலை உச்சிக்கு முக்கி முக்கி உருட்டிக் கொண்டு போவதும் பின்பாக அதை மேலிருந்து கீழே உருட்டித்தள்ளுவதுமான முக்கியமான பணியில் இருக்கிறான். அவன் மேலிருந்து பாறையை உருட்டிய சமயமாக நீ சென்றாயானால் அது உன் தலையில் வந்து விழுந்து நீ சட்னி ஆகிவிடுவாய்.”

“ஐயோ! அப்படியானால் நான் இந்த வடக்குப் பாதையில் செல்லவே போவதில்லை. பாங்கிணறுன்னு தெரிஞ்சும் ஒருத்தன் லைட்டு பிடிச்சுட்டே போயி குதிப்பானா? அப்படி குதிப்பவன் ஒரு பிரி கழண்டவனாக இருக்க வேண்டும். சரி இந்த கிழக்கே செல்லும் பாதையில் நான் பயணிக்கலாமா?”

“இந்தப்பாதை உன்னைக் கூட்டிச் செல்லும் இடம் ஒரு பனிமலையின் அடிவாரமாய் இருக்கும். சிகரத்தின் ஒசக்கே ஜரதுஸ்டிரன் இருக்கிறான். சாதாரணமாகவே உன்னைப்போன்ற மனிதனைக்கண்டால் அவனுக்கு வயிறு எரியும் குபு குபுவென!”

“வயிறு புடைக்குமெனத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீ சொல்வது உறுதியான விசயமென்றால் எனக்கு இந்தப்பாதையும் வேண்டாம். எதற்கெனக்கு சில்லரைப்பசங்களோடு சகவாசம் காலம் போன காலத்தில்? சிரமப்பட்டுப் போய்ச்சேர்ந்து பொல்லாப்பை தேடிக்கொள்ளவே மாட்டேன். சரி இந்த மேற்கு வழிப்பாதை? இதேனும் உருப்படியா?”

“இந்தப்பாதையின் முடிவில் தான் யாகோப் இருக்கிறான். அவன் சின்ன வயதிலிருந்தே சூழ்ச்சிகளை நிரம்பப்பெற்றவன். அவன் மனது குறுக்குப் புத்தியால் ஆனது. காலத்துக்கே தலைவன் என்கிறார்கள் அவனை. உன்னிடம் சந்தோசமாகப் பேசி கட்டியணைத்து வரவேற்பான். கூடவே தோள்மீது கைபோட்டு கூட்டிச் சென்று கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியில் தூக்கி வீசி விட்டானென்றால் உன் கதி? ஆனால் நீ கேட்கும் சூன்யம் அங்கிருக்குமா என்பதற்கான அறிகுறிகளே அங்கில்லை. நீ கேட்பதற்கும் முன்பாகவே சொல்லி விடுகிறேன் தம்பி, இந்த தெற்கு வழிப்பாதை பற்றி காற்று வாக்கில் கூட எனக்கு சேதிகள் எதுவும் கிடைக்கவேயில்லை. ஒருவேளை சொப்ன பூமியாகக் கூட இருக்கலாம்.”

“நீ தெரிவித்த தகவல்களுக்காக உனக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் பெரியவரே! நான் செல்ல வேண்டிய பாதை உனக்கு தகவலே எட்டாத இந்த தெற்குவழிப் பாதையாகத்தான் இருக்க வேண்டும். சூன்யம் என்னை வாவெனக் கைநீட்டி அழைக்கிறது. இனி ஒருகணமும் தாமதியேன்”

அட்லஸிடமிருந்து கையசைத்து விடைபெற்ற தம்பி தெற்கு வழியாக நடக்கத் துவங்கினான். கொஞ்சம் தூரத்திலேயே காற்றழுத்தம் அதிகமாய் இருப்பதை உணர்ந்தான். எதிர்க்கே யாருமில்லை எனினும் போராடி முன்னேற வேண்டியதாயிற்று. ஆனால் காற்று பலமாய் எதிர்த்தாக்குதல் நடத்துவது மாதிரியும் இவனுக்குத் தெரியவில்லை. திடீரென பொத்துக் கொண்டு வந்து விழுந்தது போல வெட்டவெளி ஒன்றில் குட்டியாக்கரணமிட்டு வந்து விழுந்தான். எங்கும் வெங்கச்சாங்கற்கள் பொடிப்பொடியாய் சிதறிக் கிடந்தன. பலத்த காற்றின் சப்தம் தூரத்தே கேட்டுக் கொண்டிருந்தது. அது பெருமழையோ? என்று நினைக்கும் விதமாக இருந்தது. அதுவும் சிறிது நேரம் தான். எல்லா சப்தமும் அங்கு அடங்கிப் போயிற்று. பள்ளத்தாக்கு ஒன்றில் தம்பி இப்போது நடக்கத்துவங்கினான். இருள் சூழப்போவதற்கான நேரம் போன்றே ரொம்ப நேரமாய் இவன் நடந்து போகையில் இருந்தபடியே இருந்தது. 

சற்றுத்தொலைவில் இவன் வருகையை எதிர்பார்த்து உடல் முழுதும் தீக்கங்குகள் மினுங்க அது அங்கே நின்றிருந்தது. அதன் உடலெங்கும் ஊது உலை வைத்தது போன்று உஸ்ஸென்று சப்தமுடன் தீ கபகபவென எரிந்து கொண்டிருப்பதை பார்த்தபடி தம்பி ஒரே கிடையில் நின்றிருந்தான்.

“நீ வருவது பற்றி எனக்கு முன்பே தெரியும். உன்னைப்பார்த்த பிறகு தான் என்னால் மேலும் சிலகாலம் வாழ முடியுமென்ற பிரகாசம் சூழ்ந்துவிட்டது. வாடி வா! வந்து வெந்து போ!” அது பேசுகையில் வாயிலிருந்து தீக்கங்குகள் பறந்தன.

“என்ன விந்தை? என்னை பார்த்த பின்புதான் உனக்கு வாழ முடியுமென்ற பிரகாசம் ஜொலிக்கிறதா? ஷேம் ஷேம்! என்னை கற்களால் விரட்டியடித்த இரண்டு பிரிகள் கழண்ட மனிதர்களை விட முத்திப்போன லூசு நீதான்”

“நீ அழகானவன். நீ இளமையானவன். இதோ இந்தப்பள்ளத்தாக்கில் வெந்துகிடக்கும் உடல்களைப்பார்! எல்லாரும் கிழவாடிகள். இத்தனை பேர்களையும் வேக வைத்து உயிர்வாழும் தீச்சுடரொளி நான்.”

“என்ன? எனக்கும் முன்பாகவே பலர் இங்கு வந்துள்ளனரா?”

“அடக்கேனப்பொச்சா! நீங்களெல்லாம் எப்படியடா சூன்யவெளிக்குப் போக முடியும்? இந்தப்பிரபஞ்ச வெளியெங்கிலும் அப்படியொரு இடம் கிடையவே கிடையாது. நீ உன் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய். உன் கோணலான வழியால் நல்வழியிலிருந்து விலகி வெகுதூரம் பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறாய். சரி நீங்களெல்லாம் சூன்யவெளிக்குச் சென்று என்னத்தைப் புடுங்கப்போகிறீர்கள்? ஒரு மூலையில் அமர்ந்து எவளையாவது நினைத்து குலுக்கிக் கொண்டிருப்பீர்கள்! இடங்களை நாசம் செய்வதற்கென்றே கிளம்பி விடுகிறீர்கள்!”

“நான் சந்தித்த அட்லாஸ் இதைக் கூறவேயில்லையே!”

“அவனா? அவனொரு ஞாபக மறதிக்காரனாயிற்றே! ஒன்னுன்னா ஒம்போதும்பான்! கேக்குறவன் கேனையின்னா கேரளாவுல யானையொன்னு சேச்சியெ செஞ்சிடுச்சும்பான்!”

தம்பிக்கு வெந்துபோன உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று கிடப்பதைக் காண்கையில் உதறல் எடுத்தது. இப்படியே அதனிடம் பேசிக்கொண்டிருப்பதிலும் பயனில்லை. அண்ணா, தம்பியைக் காப்பாற்ற வேண்டுமெனில் தீயணைப்புத்துறைக்குத்தான் தகவல் கொடுக்க வேண்டும். அது மெதுவாக தம்பியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

மீண்டும் தம்பி ‘உட்டேஞ்சவாரி’ என ஓட்டமெடுத்தான். திரும்பி தப்புறு குப்புறுவென ஓட ஆரம்பித்தவன்  பின்னால் திரும்பியும் பார்க்கவில்லை. எப்படியும் காற்றழுத்தப் பகுதிக்குள் போய் விட்டால் தப்பிவிடலாம் தான். ஐநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல்ப்பரிசை தட்டிச் செல்லும் வேகத்தில் ஓடிய தம்பியின் முதுகில் முதல் தீக்கங்கு விழுந்தது.
000
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்