இவனுக்குத் தெரியும்


 


இவனுக்குத் தெரியும்

 

  பொன்னம்பலம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த சமயம் வெளியே மழை பெய்து ஓய்ந்திருந்தது. பொன்னம்பலம் கார்த்திகா இண்டஸ்ட்ரீஸில் வெல்டர் வேலை பார்ப்பவன். மின்சார தட்டுப்பாடு காரணமாக, மதியமே வேலை இருந்தும் செய்ய முடியாமல் இவனது அறைக்கு வந்து விட்டான். வந்ததும் ஒரு தூக்கம் கூட போட்டு எழுந்து விட்டான். மணி மூன்றாக இருக்கலாமென தோராயமாக கணக்கிட்டு, அதுவே சரியெனவும் எண்ணியபடி பாயிலிருந்து எழுந்தமர்ந்து தலையணைக்கு அடியிலிருந்த பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

 

    அதே சமயம் பக்கத்து அறையில் சாமான் அடுக்கு தடதடவென சரிந்து விழும் ஓசை இவனுக்கு கேட்டது. அதைத் தொடர்ந்து எஸ்தர் தனது தம்பியைத் திட்டி இரண்டு அடி வைப்பதும் கேட்டது. அவன் பெரிதாய் கூக்குரலிட்டு ஏதோ கெட்ட வார்த்தை ஒன்றை உச்சரித்து விட்டு படிகளில் இறங்கி ஓடும் ஓசையும் கேட்டது. ‘அப்புறமா காபி வேணுமக்கா! அப்படினுட்டு வருவே தானே? இன்னொரு பூசை கொடுக்கிறேன்என்றபடி எஸ்தர் விழுந்த சாமான்களை அடுக்கி வைப்பதில் ஈடுபடுவதையும் இவன் உணர்ந்தான்.

 

  அவனை எதுக்கு அடிச்சே எஸ்தர்?” என இவன் இங்கிருந்து குரல் கொடுத்தான். பதில் எதுவும் வராமல் நிமிடங்கள் கழிந்தன. பதில் வராமல் போனதற்கான காரணம் பொன்னம்பலத்திற்கு தெரியுமாகையால் தனது முடி அடர்ந்த தாடையைத் தடவினான். இன்று எப்படியும் ஷேவிங் செய்து விடத்தான் வேண்டுமென முடிவெடுத்தான். கூடவே தலைமுடியையும் சிறிது குறைத்துக் கொள்ளலாம் தான். வொர்க்‌ஷாப்பிலிருந்து வருகையில் ஓனரிடம் இருபது ரூபாய் வாங்கி வந்தது கூட வசதியாய் போய்விட்டது தான். விடுப்பானதிற்கு உருப்படியாய் இந்தக் காரியத்தையாவது செய்வோமென பீடியை கடைசியாய் இழுத்துப் புகைவிட்டபடி அதை நசுக்கி மூலைக்கு சுண்டி விட்டான். பாயைச் சுருட்டிக் கயிற்றுத் தொங்கலில் மாட்டிவிட்டு, சுவரிலிருந்த கண்ணாடியில் முகம் பார்த்து, கண் துடைத்துக் கொண்டான்.

 

   எஸ்தருக்கு இவனது செய்கைகள், பழக்க வழக்கங்கள் எதுவுமே பிடிக்காது தான். பொன்னம்பலம் பின் ஊசியால் அடிக்கடி சுகமாய் காது குடைவான். அச்சமயங்களிலெல்லாம் அவன் பாடல் ஒன்றை முனுமுனுத்தவாறு இருப்பான். அது எஸ்தருக்குப் பிடிக்காது. பின் ஊசியால் காது குடைந்தால் காது கேட்காமல் போய்விடுமென்பாள். இவன் சட்டென ஊசியை அறைக்குள் எங்காவது வீசி விடுவான்.

 

   எப்போதாவது பொன்னம்பலத்திற்கு திடீரென பாட்டு கேட்கும் ஆசை வந்து விடும். பெட்டிக்குள் கிடக்கும் ரேடியோவை எடுத்து ஸ்டேசன் தேடுவான். செகண்ட் பேண்டு, தேர்டு பேண்டு என்று மாற்றி மாற்றித் திருப்பி, கடைசியில் ஒரு ஆங்கிலப்பாடலைப் பாட வைத்து விட்டு அறைக்குள் குதிப்பான். அப்படிக் குதிக்கையில் உலகில் தன்னைவிட ஆனந்தமான பேர்வழி யார்? என்ற யோசிப்பில் குதிப்பான். திடீரென பாடல் நின்று போகும். ’சைஎனச் சலித்து விட்டு பாயில் அமர்வான். பின்பாக மீண்டும் பாடல் துவங்குகையில், ‘இது பாட்டுஎன மறுபடியும் எழுந்து அறையைச் சுற்றிலும் சுற்றிச் சுற்றி நடனமாடி வருவான். தனது கிராமத்தில் முன்பெல்லாம் வரும் ரெக்கார்டு டான்ஸ் குரூப்பில் இப்படித்தான் தாளத்தின் போது சுற்றிச் சுற்றி வருவார்களென எண்ணிச் சுற்றுகையில், ‘இந்தக் கருமம் வேறயா?’ என அறைகுள் எஸ்தர் வந்து ரேடியோவையே அணைத்து விடுவாள்.

 

  தங்குற வீட்டுல இப்படிக் குதிக்கக் கூடாதுங்க. இந்தப் பாட்டுல என்ன புரியுது உங்களுக்கு?” என்பாள். இவன் முகத்தை சுவர்ப்புறமாகத் திருப்பி, எப்படி அறையின் கதவை தாழிடாமல் இருந்தோமென யோசிப்பான். இனி குதிக்கையில் எப்போதும் ஏமாறக் கூடாதென முடிவெடுப்பான். ஆனால் ஏமார்ந்து போய் விடுவான். இந்த விசயத்தில் மட்டும் எஸ்தருக்கு இவனது பழக்கவழக்கங்கள்தான்  பிடிக்காதேயொழிய இவனை நிரம்பப் பிடிக்கும்.

 

  எஸ்தர் சந்தோசமாய் இருக்கும் சமயங்களில் இவனுக்கென தனியே பலகாரம் செய்வதுண்டு. அப்படி பலகாரம் ஆகிறதென்றால் என்னதான் பொன்னம்பலம் பாதுகாப்பாய் இருப்பினும் மீசை, கிருதாவை இழுத்து விட்டு எஸ்தர் ஓடுவது தவிர்க்க முடியாது போயிருக்கிறது. பொன்னம்பலம் சந்தோசமாயிருக்கையில் எஸ்தரின் ஜடையையோ, காதையோ இழுக்க முடியாது. ‘இது என்ன புதுப்பழக்கம்?’ என்பாள். கூடவே முறைப்பாள்.

   எஸ்தரின் அம்மா கிருபைக்கு, அருகிலிருக்கும் ஸ்கூலில் ஆசிரியையாக உத்தியோகம். அம்மா இருக்கும் சமயங்களில் எஸ்தர் பெட்டிக்குள் பாம்பாக அடங்கி இருப்பாள். சப்தமே இராது. இவன் அறைக்கு வந்த புதிதில் எஸ்தரின் அப்பா டேவிட் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். அப்போதெல்லாம் எஸ்தர் இப்போது இருப்பதைப் போன்ற தடிமன் இல்லை. ‘விசுக் விசுக்கென அழுது கொண்டே இருக்கும் எஸ்தரைப் பார்த்து அடிக்கடி பாவப்பட்டான். அதன் பின் இருமாத காலம் வரை வீங்கிப் போன முகத்துடனே எஸ்தர் இவன் பார்வைக்கு தென்பட்டாள். முதன் முதலாய் ஆறுதல் வார்த்தைகளை கூறி எஸ்தரிடம் பழக ஆரம்பித்தான்.

 

   எஸ்தரின் தம்பி அசோக் இவனுக்கு அடிக்கடி பீடிக்கட்டு வாங்கிக் கொடுக்க மட்டும் தேவைப்பட்டான். அது ஒருமுறை எஸ்தருக்கு தெரிந்து போய், கொடுத்த காசிற்கு வாழைப்பழம் வாங்கி வந்தான் அசோக். ‘அக்கா தான் சொல்லி விட்டுச்சுஎன பாயில் பழங்களைப் போட்டு விட்டு ஓடிப் போனான். அன்றிலிருந்து அவனிடம் எதுவும் வாங்கி வரும்படி இவன் அனுப்புவதேயில்லை.

 

   பொன்னம்பலம் மேல் துணியை அணிந்து கொண்டு கிளம்பினான். மறுபடியும் ஒரு பீடி பற்றலாமென யோசித்து, சலூன் போய் பார்த்துக் கொள்ளலாமென அறையைப் பூட்டி வீட்டு படிகளில் இறங்கினான். அதே சமயம் எஸ்தர் தண்ணீர்க் குடத்துடன் படிகளேறி மேலே வந்தாள். ‘மழை பெஞ்சிருக்குமாட்ட இருக்கே எஸ்தர்?’ என அவளிடம் கேட்க, பதிலெதும் பேசாமல் அவனைக் கடந்து மேலே செல்ல, இவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இவள் கோபத்திற்கு காரணம் தாடியை எடுக்காமலிருப்பது தானென இவனுக்குத் தெரியும். படிகளில் இறங்கி வந்தவன் சாலைக்கு வந்தான்.

 

  என்ன பொன்னம்பலம், இன்னைக்கு வேலைக்கு மட்டம் போட்டாச்சா?” என விசாரித்தான் சாலையோரம் தள்ளுவண்டியோடு நின்றிருந்த தேங்காய்ப்பால் வியாபாரி கந்தன். இவன்கரண்ட் இல்லைஎன்றான்.

 

  என்னா சார் கவர்மெண்ட்டு? கரண்ட்ட திம்பாங்க போல! ஒரு கிளாஸ் ஊற்றவா?” எனக் கேட்க, ‘வேண்டாம்எனக் கூறி விட்டு சாலையின் ஓரமாய் நடந்தான். சாலையில் ஆங்காங்கு தேங்கி நிற்கும் தண்ணீரால், சாலையில் போகும் ஸ்கூட்டர், ஆட்டோக்களுக்கு பயந்து மிக ஓரமாய்ச் சென்றான். முனியாண்டி விலாசைக் கடந்து போகையில் முனியாண்டி இவனைக் கூப்பிட்டார். “பேலன்ஸ் தொன்னூறு நிக்குதே!” என்றார். இவன், ‘நாளைக்குத்தான் சம்பளம்என்றான். ‘இல்ல இன்னிக்கு சனிக்கிழமையோன்னு கேட்டேன்என்று முனியாண்டி இழுக்க, சாப்பாட்டுக் கடையை சீக்கிரமாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைத்தபடி நடந்தான். செல்வம் ஹேர் கட்டிங் சலூன் இவன் வழக்கமாகப் போகுமிடமாகையால் அதை மாற்ற மனமின்றி நுழைந்தான் கடையினுள்.

 

   வாங்க, ரொம்ப நாளா ஆளே இந்தப்பக்கம் காணோமே! உட்காருங்கஎன்றார் செல்வம். ‘வேலை ஜாஸ்த்தியா இருந்துதுங்க. சோம்பலாவும் போச்சுஎன்றவன் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். கட்டிங் சேரில் ஏற்கனவே கட்டிங் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

  இந்தக் கட்டிங்கை முடிச்சதீம் உங்களுக்கு பண்ணிடலாம்என்றவர் தன் வேலையில் ஆழ்ந்தார்.

 

   பொன்னம்பலம் எதிரே தெரிந்த விநாயகர், சரஸ்வதி புகைப்படங்களை ஒருமுறை பார்த்தான். பின் தென்பகுதி சுவற்றில் பெரிய புகைப்படங்களில் அனுராதா, சிலக் நிற்க அவர்களைப் பார்த்தான். ‘என்னங்க புதுசாப் பாக்குறாப்ல பாக்கறீங்க?’ என கடைக்கார செல்வம் கேட்க, புன்முறுவல் ஒன்றை காட்டிக் கொண்டு நசுங்கிக் கசங்கிக் கிடந்த தினசரியின் தாள் ஒன்றினை எடுத்தான். கவர்ச்சிப்படம் எனப்போட்டிருந்ததின் கீழ் சிரிக்கும் தெத்துப்பல் அழகியைப் பார்த்தான். ‘செமெக்கலக்கல் சார் அந்தப் பொண்ணு! பூவாத்தா படதுலயோ என்னமோ ஒரு டான்ஸ் ஆடும் பாருங்க.. அடடா கொன்னே போட்டுது போங்க! பீல்டுல கபகபன்னு முன்னேறி எங்கியோ போயிடும் பாருங்க அந்தப் பொண்ணு. என்ன நாஞ் சொல்றது?” என கட்டிங் போடும் நடுத்தர வயதுக்காரரை சப்போர்ட்டுக்கு இழுத்துக் கடைக்கார செல்வம் பேசினார்.

 

   அது ஏனோ இவனுக்குப் பிடிக்கவில்லை. சிரிப்பு எனப் போட்டிருந்த பகுதியில் ஆழ்ந்தான். கட்டிங் முடிந்ததுமே பொன்னம்பலம் மணியைப் பார்த்தான். இவன் பார்க்கும் சமயம் பக்கத்திலிருந்த ஒரு கம்பெனியில் சங்கும் ஊதியது. மணி நாலே கால்.

  அம்சமா இந்த முறை வந்திருக்குங்க கட்டிங்குஎன்றான் நடுத்தர வயதுக்காரரிடம் செல்வம்.

 

  இந்த மீசையை லைட்டா ஒதுக்கி விடுஎன அவர் சொல்ல செல்வம் அதை ஒதுக்கி விடுவதில் கத்தியை வைத்துக் கொண்டு கவனமானார். அதே சமயம் பெரியவர் கூடவே ஒரு சிறுவனோடு கடைக்குள் வந்தார்.

 

  வாங்க பெரியவரே! பையன் யாரு உங்க பேரனா?”

 

  ஆமாண்டாப்பா, என்ன முடிஞ்சுதா?”

 

  தோ, முடிஞ்சுதுங்க உட்காருங்கஎன்றார் செல்வம். ஏற்கனவே கட்டிங் முடித்தவர் செல்வத்திடம், ‘இந்த வாட்டி இதைப் புடிச்சுக்கோ, அடுத்தவாட்டி சேர்த்தி வாங்கிக்கோஎன்று அவர் கையில் ஐந்து ரூபாய் தாள் ஒன்றை கொடுத்து விட்டு ஹேங்கரில் தொங்கிய அவரது மேல் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார். வந்த பெரியவர் உடனே கட்டிங் சேரில் ஏறி அமர்ந்து கொண்டார். ‘இந்த ஒரு சேவிங்கை முடிச்சுக்கறேனுங்க, அப்புறமா உங்களுக்கு கட்டிங் போட்டுக்கலாம்என்று சொல்ல, பொன்னம்பலம் தலையை ஆட்டி விட்டு மறுபடியும் பேப்பரைப் புறட்டினான். பீடி ஒன்றைப் பற்ற வைத்து கடைக்குள்லேயே புகையை மேலே பார்த்து ஊதினான்.

 

  சிறுவன் பெஞ்ச்சில் இவனை ஒட்டினாற்போல அமர்ந்து கால்களை வேகமாக ஆட்டிக் கொண்டே சினிமா நடிகைகளைப் பார்க்கவும், ‘அந்தக்காளைக் கட்டிக்கிறியாடா தம்பி?’ என கடைக்கார செல்வம் சேவிங் செய்தபடி கேட்க, சிறுவன் வெட்கப்பட்டுக் குனிந்து கொண்டான். ‘உங்க பேரனுக்கு வெட்கத்தைப் பாருங்கொஎன்று சிரித்தபடி சொன்னார். ஒருவழியாக சேவிங் முடிந்து பெரியவர் எழுகையில் மணி ஐந்தாகியிருந்தது.

 

  பையனுக்கு மெஷின் போட்டு வெட்டி வுடுப்பா, டேய் இப்படி வந்து மெத்தைச் சேர்ல உக்காருஎன்றபடி அவர் சிறுவனைத் தூக்கி சேரில் அமர வைத்தார். பையன் இப்போது பீதி நிறைந்த கண்களோடு காணப்பட்டான்.

 

  இதென்னுங்க மெஷின்ல நாலே ஓட்டு ஓட்டி முடிச்சிடறேன். அப்புறம் உங்களுக்குப் பண்ணிக்கலாம்என்று செல்வம் இவனைப் பார்த்துக் கூற, உடலை முதுகோடு சேர்த்து ஒரு வளை வளைத்து விட்டு மீண்டும் தொய்வாய் அமர்ந்தான் பொன்னம்பலம். சிறுவன் ஏக கலாட்டா செய்தான்.

 

  பெரியவர் அவனை சீட்டில் அழுத்திப் பிடித்துக் கொண்டார். மெஷின் சிறுவனது பின் மண்டையில் படுகையில்குய்யோ முய்யோவென சிறுவன் சப்தமிட்டான். இது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கவே பேப்பரை மடித்து பெஞ்சின் ஓரத்தில் வைத்து விட்டு சிறுவனை வேடிக்கை பார்த்தான். சிறுவன் சப்தம் மட்டுமே நாலு கடைகளுக்கு கேட்கும் விதமாய்ப் போட்டான். வேறு எதுவும் புதிதாய் அவன் செல்வத்தையோ பெரியவரையோ துன்புறுத்தவில்லை. மெஷின் வாகாய்த்தான் அவன் மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது. பொன்னம்பலம் சாலையில் திடீர் திடீரென மறையும் வாகனங்களை பார்த்தான் கடைக்குள் இருந்தபடியே. பையனுக்கு கட்டிங் முடிய முக்கால் மணி நேரமாயிருந்தது. மீண்டும் ஐந்தே முக்கால் சங்கு ஒலித்தது. பெரியவர் சிறுவனைக் கூட்டிக் கொண்டு போய் விட்டார். பொன்னம்பலம் எழுந்தான்.

 

  கொஞ்சம் பொறுங்க, நான் எதுக்கால கடையில ஓடிப் போயி ஒரு டீக்குடிச்சுட்டு மளார்னு வந்துடறேன்என்று சென்ற செல்வம் திரும்ப கடைக்கு வர ஆறுமணியாகியிருந்தது.

 

  அடடா, விளக்கைப் போடாம உக்கோந்திருக்கீங்களா?” என்றவர் கடைக்குள் வந்ததும் வெளி விளக்கையும், உள் விளக்கையும் எரிய வைத்தார். ‘ஒரு தம்மையும் போட்டுடறேன்என்ற செல்வம் பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு கடையின் வாசல்படியில் நின்றார். நாலே இழுப்பில் அதை டிச்சில் வீசி விட்டு ஊதுபத்தியை பற்ற வைத்து சாமி படங்களுக்கு காட்டிக் குத்தினார். ‘இத நாலு இழுப்பு இழுத்து விடு செல்வண்ணே, நேத்தே முடியாதுன்னு சொல்லி தாட்டி வுட்டுட்டே!’ என்று வந்தவன் ஒருவன், கடையினுள் வந்ததுமே சேரில் ஏறி அமர்ந்து கொண்டான். பொன்னம்பலம் செல்வம் முகத்தை சோம்பலாய்ப் பார்த்தான்.

 

  நாளைக்கிப் பண்ணிக்கப்பா நீயிஎன்று செல்வம் சொல்ல, ‘ஏன் இப்ப நீங்க சும்மா தான்ணே இருக்கீங்க?” என்றான்

 

  இல்ல இவரு மூனு மணிக்கி கடைக்கி வந்தாரு. இன்னமும் இவருக்கு பண்ணி வுடலை நானு!” என்றதும், ‘தேனுங்க, ஒரு பத்து நிமிசத்துல நான் பண்டீட்டு ஓடீர்றனுங்க. ரொம்ப தூரம் சைக்கிள்ல போவணும்என இவனைப் பார்த்து அவன் சொன்னதும், தலையை சரியென ஆட்டி விட்டு மணியைப் பார்த்தான். ஆறு அரை என்று காட்டியது. அதிக நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தான் இவன். மனதை குழப்பிக் கொள்ளாமல் நாளை ஒரு ஷேவிங் செட் வாங்கிக் கொண்டு எப்பாடு பட்டேனும் தனியே பண்ணிக் கொள்ள முடிவெடுத்தான். முடிவெடுத்ததுமே பெஞ்சிலிருந்து எழுந்தான்.

 

  இவ்ளோ நேரம் இருந்தீங்களாமா.. பண்ணீட்டே போயிடலாம் இருங்க

 

  இல்ல, எனக்கு வேற ஜோலி ஒன்னு இருக்கு. நான் நாளைக்கி வந்து பண்ணிக்கறேன்என்றான்.

 

  பண்ணீட்டே சோலிக்கி போயிக்கலாம் இருங்க. இதென்ன முடிஞ்சுது.. சோப்பு போட்டாச்சு பாருங்க

 

  இல்ல நான் வர்றேன்எனக் கூறி விட்டு சாலைக்கு வந்தான். எஸ்தரிடம் பேசுவதற்கு இன்னும் எப்படியும் இரண்டு நாள் ஆகிவிடுமென்ற யோசனையில் வீடு வருகையில் மாடிப்படியருகே விளக்கு வெளிச்சத்தில் நாய்க்கு சாப்பாடு போட்டபடி இருக்கும் எஸ்தர் தெரிந்தாள்.

 

  நானே நாளைக்கு ஷேவிங் செட் வாங்கிப் பண்ணிக்கறேன்எனக் கூறி விடலாமென அருகில் சென்றான். இவன் வருவதைக் கண்ட எஸ்தர் சட்டென முழுதாய்ச் சோற்றை கவிழ்த்து விட்டு,’நான் என்ன பாவம் செய்தேனோ, இந்த நாய் இப்படி படுத்துது. பிச்சைக்கார நாயாட்டம் நான் இருக்கப்ப இது ஏன் இப்படியே சுத்தணும்?’ என இவனுக்கு கேட்கும் வண்ணமாய் கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறி ஓடினாள். இவனுக்கு திரும்பவும் கடைக்குச் சென்று சேவிங் பண்ணி விட்டே வந்துவிடலாம் போலிருந்தது. இருந்தும் படிகளேறித் தன் அறைக்குள் வந்தான்.

 

   பக்கத்து அறையில் விசுக் விசுக்கென எஸ்தர் அழுவது கேட்டது. அவளது அம்மா,’இப்படி ஏனடி அப்பனை நினைச்சு அடிக்கடி அழறே? அவர் தான் கர்த்தர்கிட்ட போய்ச் சேர்ந்துட்டாரேஎன்று தேற்றிக் கொண்டிருப்பதும் இவனுக்கு கேட்டது.

 

   இவனுக்குத் தெரியும், எஸ்தரின் அழுகை இப்போது தனக்காகத்தான் என்று!

 

                                       -கவிதாசரண் 92


கருத்துரையிடுக

1 கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு பிடித்த கதை