தங்கமான நீர்யானைகள்தங்கமான நீர்யானைகள்

வா.மு.கோமு


பக்கத்து வீடு ஒரு மாதமாகவே காலியாக இருந்தது. காலனியில் எல்லா வீடுகளும் நிரம்பியிருக்க இந்த வீட்டில் வாடகைக்கு வந்து தங்கும் குடும்பங்கள் மட்டும் சொல்லி வைத்தாற்போல ஆறு மாத கால அளவில் வேறு வீடு பார்த்துக் கொண்டு சென்று விடுவது மட்டும் ஏன் என்று ராம்தாசுக்கு தெரியவில்லை. ஒருவேளை அந்த வீட்டின் வாஸ்த்து சரியில்லையோ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.


அது அந்த வீட்டின் முதலாளியின் கவலை. நமக்கென்ன வந்தது? என்று ராம்தாஸால் நினைக்க முடியவில்லை. ஒருவேளை பக்கத்து வீட்டில் குட்டிச்சாத்தான் வசித்து வந்ததால் தானோ என்னவோ வாடகைக்கு வருபவர்கள் ஓடி விடுவது நடக்கிறதாய் நினைத்தான். மாறாக கன்னிப்பிணம் புதைத்த இடத்தில் கூட அந்த வீடு கட்டப்பட்டிருக்கலாம்.


ஒருமாத காலம் அந்த வீட்டினுள்ளிருந்த பெண்பேய் இவனது வீட்டினுள் இப்போது நுழைந்து விட்டதோ என்ற அச்சமும் ராம்தாசுக்கு இருந்தது.ராம்தாசுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகியிருந்தது. அவனது திருமணம் இந்தக் குறுநகரின் மிகச்சிறிய மண்டபத்தில் சிறுமாண்டமாய் நிகழ்ந்தததற்கு காரணம் இவனது மனைவி இவன் மீது கொண்டிருந்த காதல்.


இவனது மாமனார் ஒருகாலத்தில் குறுநகரின் தாதா. அவரது கூடவேயிருந்த அடியாட்களுக்கு பணத்தை தண்ணீராய் செலவழித்து கொண்டாட்டம் போட்டு இளமைக்காலத்தை ஓட்டியிருக்கிறார். அந்த பழைய வரலாறு எதையும் இவன் தெரிந்து கொள்ளும் முன்பாகவே இவனிடம் அப்பாவிப்பிள்ளை போல நடித்து, இந்தக்காலத்தில் புகை, தண்ணி, பெண் சகவாசம் என்று எதுவுமில்லாமல் சுத்தபத்தனாக இருந்த ராம்தாசுக்கு காதல் செக் வைத்து கட்டிக் கொண்டாள் சரஸ்வதி.


சரஸ்வதியை பெண் பார்க்க அவளது இருபத்தைந்து வயது வரை யாரும் வராததற்கு காரணம் அப்பன் பழைய ரவுடி என்பதால் தான். அவளது பக்கத்து வீட்டில் வாடகைக்கு வந்த குடும்பத்திலிருந்த முக்கியஸ்தன் தான் ராம்தாஸ். ராம்தாஸ் குடும்பத்தில் அப்பா அம்மா தங்கை என்று குடும்ப உறுப்பினர்கள் இருக்க எந்த ஊரிலிருந்து வந்து தங்கியுள்ளார்கள் என்பதெல்லாம் சரஸ்வதிக்கு வேண்டாத விசயம்.


அவளது அக்காள் உள்ளூரில் ஒருவனை இழுத்துக்கொண்டு போய் நான்கு வருடங்களாய் தகவலெதுவும் இல்லை. ஆனால் ஒரு விசயத்தை ஓடிப்போகும் நாளுக்கு முன்பாய் சரஸ்வதிக்கு சொல்லிப் போனாள்.


நம்ம தாதா அப்பன் சாதாரணப்பட்ட ஆளில்லை சரஸ், மண்டையில கட்டையால அடிபட்டதால தான் தன்னோட பழைய நினைப்புகளை மறந்திட்டான். ஆனால் நமக்கெல்லாம் நகை சேர்த்தித்தான் வச்சிருக்கான்.. இந்தா வந்து பார் பீரோவை. இந்த ரெண்டு பெட்டியில் உன் பெயரை ஒன்றிலும் என் பெயரை ஒன்றிலும் எழுதி வச்சிருக்கான் பார். என் பெட்டியில் முப்பது பவுன் நகையிருக்கு. நான் தூக்கீட்டேன். உனக்கானது உனக்குத்தான். சீக்கிரமாய் உனக்கானவனைக் கண்டு இங்கிருந்து அவனோடு பெட்டியை தூக்கி ஓடு


சரஸ் அக்கா ஓடிப்போன அதிர்ச்சியை அப்பாவிடம் சொல்லிக் குறைத்துக் கொண்டாள். தாதா அப்பாவும் கொஞ்சமாய் அதிர்ச்சி வாங்கி பழைய நினைவுகளுக்கு கொஞ்சம் திரும்பினார். திடீர் திடீரென, ’சரசு இங்க வாயேன்! நம்ம பசங்கெல்லாம் எங்க போனானுங்க? அவனுங்களை அனுப்பி உங்கக்கா புருசனைத் தேடச் சொல்லி தூக்கிடட்டுமா?’ என்று இவளை சில சமயம் நிதானமாக பேசி பயமுத்தினார்.


மற்றொருமுறைஏன் சரசு, உங்கக்கா புருசனை நம்ம பசங்க போட்டுத்தள்ளின பிறகு எனக்கு பணம் குடுக்குறது யாரு? அவனோட அப்பனா?’ என்று கேட்டு வைத்தார். நல்லவேளை இவளது திருமணத்தின் போது கொஞ்சம் நிதானமாக இருந்தார் தாதா. மண்டபத்தில் வருபவர்கள் எல்லோரும் வணக்கம் வைக்க மகிழ்ந்து திருப்பி வணக்கம் வைக்காமல்சாப்பிட்டு போங்க!’ என்று சொல்லி மகிழ்வாய் இருந்தார். ‘பசங்கெல்லாம் சாப்டுட்டானுங்களா?’ என்று சரஸ்வதியை விசாரித்தார். பசங்கெல்லாம் இவரை விட்டுபோய் செட்டிலாகி வருடங்கள் பலவாயிற்று என்பதை மறந்திருந்தார்.


அப்பாவுக்கு இப்படியிருக்கிறது என்பதால் அடிக்கடி துக்கப்படும் சரஸ்வதியை சமாதானப்படுத்தும் வேலை ராம்தாசுக்கு இருந்தது. வருடம் ஒன்றாகியும் ஒரு அம்மிக்கல்லைக்கூட மருமகள் பெற்றெடுப்பதற்கான அறிகுறி இல்லாததால் ராம்தாசின் அம்மா சோதிடரை நாடினாள்.


சோதிடர் தனிக்குடித்தன ஐடியாவைத் தர, வாடகை வீட்டை உதறிவிட்டு தாதாவை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதாய்க் கூறி சரஸ்வதியின் சொந்த வீட்டினுள் நுழைந்தது ராம்தாசின் குடும்பம்.போக நான்கைந்து வீதிகள் தள்ளி நாற்பது வீடுகளையுடைய காலனிக்கு தனிக்குடித்தனத்திற்காக பால் காய்ச்சி அனுப்பி வைத்தது இவர்களையும்.


சரஸ்வதி ராம்தாசின் வாழ்க்கை இரண்டு வருடங்கள் மகிழ்வாய் ஓடியதென்றாலும் பிள்ளை வரத்தை மட்டும் கடவுளானவர் அவர்களுக்கு கொடுக்க தாமதப்படுத்திக் கொண்டேயிருந்தார்.. வாழ்க்கை மகிழ்ச்சியாய் ஓடியதால் சரஸ்வதி இரண்டு வருடத்தில் எழுபது கிலோவிலிருந்து உயர்ந்து நூற்றியெழுபது கிலோவுக்கு தன் உடலை மாற்றியிருந்தாள்.


காதல் கணவனிடம் பாசமாய் அவன் பணிக்குக் கிளம்புகையில் முத்தமிட்டு அனுப்பி, மாலைக்குளியல் போடும் கணவனுக்கு முதுகு தேய்த்து விட்டு பரவசமாய் இருந்த அபிநய சரஸ்வதி குத்தாட்ட சரஸ்வதியாக மாறிப்போய் ஒரு வாரகாலமாகி விட்டது.


சரஸ்வதியின் கைகள் இவன் தலை கோதுகையில் யானையின் தும்பிக்கை கொண்டு ஆசீர்வதிப்பதாய் நினைத்திருந்த ராம்தாசுக்கு இப்போது அவள் கைகளை ரசிக்க முடியவில்லை. இவனது உடலின் பல பாகங்கள் சிதைந்திருந்தன. சரஸ்வதி தாதாவின் வாரிசென நிரூபித்தாள். சின்னப்பிரச்சனைக்கெல்லாம் இவனை குனிய வைத்து முதுகில் குத்த ஆரம்பித்திருந்தாள். மாலையில் வீடு போவதற்கே அஞ்சி நடுங்கினான் ராம்தாஸ்.


சரஸ்வதியிடம் இந்த திடீர் மாற்றம் எதனால் என்று மட்டும் தெரியாமலிருந்தது. கண்டபடி கண்ட விசயங்களுக்காக, கண்ட இடத்தில் அடிக்கிறாள் என்று ஓடிப்போய் விடவும் இவனால் முடியவில்லை. சரஸ்வதி இவனைக் காதலித்து மணந்து அன்போடு நடந்து கொண்ட நாட்களின் ஞாபகம் ஃப்ளாஸ்பேக்காக வந்து இவன் நெஞ்சை நக்கியது.


ஆக பக்கத்து வீட்டிலிருந்து பேய் ஒன்று அந்த வீட்டில் தனித்திருக்க போரடித்ததால் இங்கே நுழைந்து சரஸ்வதியின் உடலுக்குள் டிரான்ஸ்பராகி இவனை நொங்கெடுக்கிறது போலும்! சரஸ்வதிக்கு அது தெரியாதில்லையா.. பாவம்.


இவன் இனி நாடிச் செல்வது பேய் விரட்டும் பூசாரியாகத்தான் இருக்க வேண்டும். தன் குடும்பத்தில் கலந்தாலோசித்த ராம்தாஸ் விடுப்பு நாளான ஞாயிறு ஒன்றில் நகரில் பிரபலமான பேய்விரட்டியை அழைத்து வந்தான் வீட்டுக்கு. பேய்விரட்டி வீட்டின் வாசலில் காலை வைத்ததுமே உடலைச் சிலுப்பிக் கொண்டார். நிறைய பேய்ப்படங்களை பார்த்திருப்பார் போலிருக்கிறது தன் செல்போனில். ‘இரிக்கீ!’ என்றார். நன்றாக பேசினவர் முகம் இப்போது பேயடித்தது போல காட்சியளிக்க ராம்தாஸ் வீட்டின் கதவை அவருக்காக விரித்தான்.


சரஸ்வதியை வீட்டு ஹாலில் ஒரு சாக்பீஸால் வட்டமிட்டு அதனுள் அமர வைக்க முயற்சித்த பேய் விரட்டியை காலாலேயே மிதித்து வீட்டின் வெளிப்புறத்துக்கு ஓடச் செய்தாள். ராம்தாசைத் தாக்குகையில் கூட சற்று நிதானம் அவளிடமிருக்கும். இப்போது அது மிஸ்ஸிங். பேய் விரட்டி இவன் கொடுத்த அட்வான்ஸ் தொகையை இவன் வாசலில் விட்டெறிந்து விட்டு ஓட்டமாய் ஓடிப்போனார்.


காலனி ஜனம் முனி பார்ட் நான்கை நேராகவே தரிசிக்க வந்து ஏமாற்ற முகத்தோடு திரும்பியது. இருந்தும் இப்போதைக்கு இது சைடு ரீலாகவும் இருக்கலாமென நினைத்தது. மெயின் பிக்சர் நாளையிலிருந்து ஓடத் துவங்கலாமெனவும் நினைத்து அலார்ட்டாகி விட்டது.வீட்டின் வெளி கேட்டினருகே ராம்தாஸ் வீட்டினுள் அடியெடுத்து வைக்க மிரண்டு அமர்ந்திருந்தான். அப்போது பக்கத்து வீட்டின் முன் ஒரு வேன் வந்து நின்றது. அதில் ஜாமான் செட்டுகள் நிரம்ப இருந்தன. வேனிலிருந்து இவன் வயது மதிக்கத்தக்க ஒருவன் இறங்கினான். ‘கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா சார்?’ என்று இவனை சார் போட்டு அழைத்தானவன். இவன் எழுந்து போய் ஜாமான்களை அவன் வீட்டினுள் கொண்டு சென்று வைக்க உதவினான்.


வேனிலிருந்து ஜாமான்கள் குறைவதாய்க் காணோம். எடுக்க எடுக்க அமுதசுரபியிருந்து அமுதம் வருவது போன்று வந்து கொண்டேயிருந்தது. ஜாமான்கள் எல்லாமும் வீட்டினுள் சென்று விட்ட நேரத்தில் கார் ஒன்று வந்து வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இருநூறு கிலோ மதிக்கத்தக்க ஒருத்தி சிரமப்பட்டு இறங்கி நின்று சுற்றிலும் ஒரு பார்வையை வீசினாள்.


அவள் பட்டுச்சேலை உடுத்தியிருக்கும் அழகைப் பார்த்த எதிர்வீட்டு ஜனம் வாசலிலிருந்து வீட்டினுள் ஓடிப்போய் கதவை அடைத்துக் கொண்டது. இருந்தும் ஜன்னல்கள் திறக்கப்பட்டன. பேயடித்த முகங்கள் ஜன்னல்களில் தெரிந்தன.


வேனுக்கு வாடகைப்பணத்தை அவன் கொடுத்தனுப்பினான். பின்பாக பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்கவும் அவனுக்கு ராம்தாஸ் உதவினான். புதியவனின் பெயர் ராமச்சந்திரனாம். அவன் மனைவியின் பெயர் லட்சுமி என்றான். ஓரளவு திருப்தியாய் பொருட்கள் அந்தந்த இடத்தில் அமர்ந்து கொண்டன.


காலையிலிருந்து ராம்தாஸ் ஒரு டீ கூட குடிக்கவில்லை. மதியம் பனிரெண்டாகி விட்டது. கேஸ் கனெக்சனை கொடுத்ததும் லட்சுமி பால் பாக்கெட்டுகளை கத்திரியில் வெட்டி புது வீட்டில் பால் காய்ச்சினாள். சூடான பால் வந்த டம்ளர் தான் புக்கிட்டியூண்டு இருந்தது. கோவில் விஷேடத்தில் பரிசுச் சீட்டு வாங்கி அதில் ஒரு டஜன் டம்ளர் குலுக்கலில் பெற்றவையாக இருக்கலாம்.


பின்பாக அவர்களும் பிள்ளையில்லா குறையால் ஜோதிடத்தை நம்பி பெரு நகரிலிருந்து இந்த குறுநகருக்கு வந்தவர்கள் என்று அறிந்து சோகப்பட்டான். லட்சுமி இவனைப்பார்த்து அடிக்கடி கண்ணடிப்பவளாக வேறு இருந்தாள். அவள் மண்டையை ஆட்டுவது, ‘வர்றியா?’ என்று கேட்பது போன்றே இவனுக்கு இருந்தது. ஒருவேளை அந்தப் பேய் வழக்கம் போல இந்த வீட்டுக்கே வந்து சேர்ந்து விட்டதா? இருக்கலாமில்லையா!


அன்று மதியம் வீடு சென்றவன் இவர்களுக்கு உதவியதற்காய் தனித்து கொறச்சலாய் மிதிபட்டவன், பேய்விரட்டியை கூட்டி வந்ததால் அதற்கென ஸ்பெசலாக ஏராளமாய் தாக்குண்டான். ஆக பேய் இரண்டாகப் பிரிந்து தங்கைப் பேயொன்றையும் உருவாக்கிக் கொண்டது!


அப்போது பக்கத்து வீட்டினுள்ளும் தங்கைப்பேய் வேலையை துவங்கி விட்டதை உணர்ந்தான் ராம்தாஸ். ‘திப்பு குப்பெனஒலி பக்கத்து வீட்டிலிருந்து இவனுக்கு கேட்டது. ‘செத்தேன்!’ என்று ராமச்சந்திரனின் ஒலி இவனைப் பீதியாக்கியது. அவன் செத்து விட்டால் போலீஸ் வரும். இவனை ஸ்டேசனுக்கு வரச் சொல்லி விசாரிப்பார்களே! இவன் பரம்பரை ஸ்டேசன் வாசலை மிதித்ததே இல்லையே!


சரஸ்வதி இவனுக்கு சாப்பாடு வட்டிலில் போட்டெடுத்து வந்து கொடுத்தாள். ஹாலில் மிதிபட்ட களைப்பில் கிடந்தவனை எழுப்பி, ‘சாப்பிடுஎனச் சொன்னாள். வேண்டாமென மறுத்தாலும் அட்டாக் ஆரம்பமாகிவிடுமென கைகழுவாமலேயே அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். ‘என்கிட்ட மிதிபடாமல் சமர்த்தா இருக்கப்பாரு!’ என்று வீடு அதிர நடந்து தன் அறைக்குச் சென்றாள்.


இவன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு போய் வாஷ்பேசினில் கழுவி வைத்தான். அப்போது வாசலில் நின்று ராமச்சந்திரன் இவனை, ‘சார் சார்என்று அழைத்தான். இவன் அவனை உள்ளே வரச் சொன்னான். சரஸ்வதியும் தன் அறையிலிருந்து வெளிவந்துயாரு?’ என்றாள். ராமச்சந்திரன் தன்னை அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு புன்னகைத்தான். இந்த அக்காப்பேயும் புன்னகைப்பதை முகத்தில் கண்டான் ராம்தாஸ்.


நான் உங்க சாரை வெளியில கூட்டிட்டு போறேனுங்க மேடம். ஊரு எனக்குப் புதுசு. மளிகைக் கடை கூட எங்க இருக்குன்னு தெரியாது எனக்கு. ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறோம்என்று சரஸ்வதியைப் பார்த்து அவன் கேட்டான். சரஸ்வதி மகிழ்ச்சியின் விளிம்பில் நின்றிருந்தாள். இன்னொரு முறை மேடம் போட்டிருந்தான் ராமச்சந்திரன் என்றால், விளிம்பிலிருந்து விழுந்து விளிம்புநிலை மக்கள் கூட்டத்தில் கலந்திருப்பாள்.


தாராளமா கூட்டிட்டு போங்க! பத்திரமா பார்த்துக்கங்க இவனை. கூட்டத்துல தொலஞ்சி போயிடுவான். கையைப்பிடிச்சி கூட்டிட்டு போங்க!” என்றாள் சரஸ்வதி. ’நீங்க கவலையேபடாதீங்க மேடம் சாரைப்பத்தி.. வாங்க சார் போவோம்என்று அழைத்தான். விளிம்பிலிருந்து விழுந்திருந்தாள் சரஸ்வதி. இருவரும் சாலைக்கு வந்ததும் பேய்களிடமிருந்து தப்பிய உணர்வோடு வேகமெடுத்தார்கள்.


நேராக ராமச்சந்திரன் டாஸ்மார்க் பாருக்குத்தான் ராம்தாசை அழைத்துப் போனான். இவனுக்குத் தான் குடிப்பழக்கமில்லையே! இருந்தும் சும்மாவுக்கேனும் அவனுக்கு கம்பெனி கொடுத்து அவன் வாழ்க்கையை தெரிந்து கொள்வோமென நினைத்தான். வீட்டில் இல்லாமலிருந்தால் மிதி மிச்சம். இவர்கள் மூலைக்காட்டில் கிடந்த காலி டேபிளில் அமர்ந்தார்கள்.


பாரினுள் எல்லா டேபிள்களுமே ஞாயிறு என்பதால் நிறைந்திருந்தன. இறைச்சலும் அதிகம் தான். எவனோநினைத்ததை முடிப்பவன் நான் நான் நான்!’ என்று பாடிக் கொண்டிருந்தான். அவன் நான் என்று உச்சரிப்பு ஒருகோட்டரை தாண்டி இரண்டாவதில் இருக்கிறானென அனைத்து டேபிள்காரர்களும் உணர்ந்தார்கள்.


சப்ளையரிடம் இரண்டு கோட்டர் ஓக்வாட் ஆர்டர் செய்து உண்பதற்கு சுண்டல், கிழங்கு என்று ஆர்டர் செய்தான் ராமச்சந்திரன். சப்ளையர் சென்றதும்நீங்க குடிப்பீங்க தானே சார்?’ என்று கேட்டான். இவன்பழக்கமில்லைங்க!’ என்றதும் நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தான் அவன்.


என்ன சார் சொல்றீங்க? என்னோட பக்கத்து வீட்டுக்காரர் நீங்க... உங்களுக்கு குடிப்பழக்கமில்லீன்னா நானெல்லாம் என்னத்துக்கு ஆவேன்? இதையெல்லாம் ஒத்துக்க மாட்டேன் சார். உலகம் அழிஞ்சே போயிடும்! நீங்க எனக்காக கம்பெனிக்கு குடிச்சுத்தான் ஆவணும். உங்க வீட்டுக்கு நீங்க போனதீம் சத்தம் கேட்டுதுங்க சார் எனக்கு!” என்றான்.


சத்தம் கேட்டதற்கும் குடிக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகிறது? என்று ராம்தாசுக்கு தெரியவில்லை. இருந்தும் இவனின் திறக்கபடாத பாட்டிலில் சரக்கும் தண்ணீரும் கலந்த தன் டம்ளரை முட்ட வைத்து சியர்ஸ் சொல்லி அரைக்கட்டிங் வீசியிருந்தான் அவன். பின்பாக கிழங்குத் துண்டுகளை எடுத்து வாயிலிட்டு மென்றான். ‘இன்னிக்கி சிறப்பான ஞாயிறாக நமக்கு இருக்கப்போகுதுங்க சார்!’ என்றான்.


ஐந்து நிமிடத்தில் முதல் கட்டிங் போதை அவனுக்கு சிறப்பாக இருந்தது. இவனது பாட்டிலைத் திருகி புதிய டம்ளரில் சரக்கு ஊற்றி தண்ணீர் கலந்தானவன். இவன் அவன் செயல்களை பார்த்திருந்தான். திடீரென பாக்கெட்டிலிருந்து மடக்குக் கத்தியொன்றையெடுத்து இவன் கழுத்துக்கு விரித்து நீட்டினான். ‘மரியாதையா எடுத்துக் குடி! குத்துனன்னா கொடல் வெளிய வந்துடும்!’ என்று கொந்தளித்தவனின் முகத்தைப் பார்த்த ராம்தாஸ் நிசமாலுமே குத்திக்கித்தி தொலைக்கப்போகிறானென டம்ளரையெடுத்து வாயில் கவிழ்த்திக் கொண்டான்.


முதலாக வாழ்க்கையில் ரம் குடிக்கிறான். அந்த வாசமே இவனுக்கு ஒமட்டியது. ‘கக்கி வெச்சே.. கழுத்துல குத்துவேன். எப்பவும் கத்தியெடுத்தா ரத்தம் பாக்காமெ மடக்க மாட்டேன்!’ என்று கொந்தளித்தான். இவன் ஜமாளித்தான் அவன் மிரட்டலால். உள்ளே பிரளயம் அடங்கி அமைதியானது.


பக்கத்து டேபிள்கள் காலியாகின சீக்கிரமாய். இவனுக்கு உடனே கிர்ரென்றிருந்தது. அவனுக்கு எதிராய் நீட்ட இவனிடம் மடக்கு கத்தியில்லை. ஆனாலும் எதையாவது எடுத்து நீட்ட வேண்டுமென தேடினான். ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டான்.


இப்ப கத்தியை நீ மடக்கி வைக்கல.. சும்மாவே எந்திரிச்சு சாவடி அடிப்பன்டா உன்னை! வீணாச் செத்துப் போயிருவே!” என்று அவனை மிரட்டினான். இவனுக்கே இவன் சப்தம் பயமாயிருந்தது. அவன் மிரண்டு போய் கத்தியை மடக்கி பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.


சார் மன்னிச்சுக்கங்க சார் என்னை! தெரியாமப் பண்ணிட்டேன். மன்னிச்சேன்னு சொல்லுங்க சார். அப்பத்தான் அடுத்த கட்டிங் குடிப்பேன்!” என்றான். பாருக்கு இருவருமே புதியவர்கள் என்பதால் சப்ளையர்கள் கண்கள் இவர்களிடமே இருந்தது. எப்போதும் மாலை நேரத்தில் தான் தமாஸ் பார்ட்டிகள் வந்து இவர்களை மகிழ்விப்பார்கள். இன்று மதியமே புதிய தமாஸ் பார்ட்டிகள் வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு செமையாக இருந்தது.


சரி குடி நான் உன்னை மன்னிச்சுட்டேன்!’ என்றான் ராம்தாஸ். அவன் நன்றி சொல்லி அடுத்த ரவுண்டு ஊற்றிக் கொண்டு பாட்டிலை காலி செய்தான். சுண்டலை கொத்தாக எடுத்து வாயில் போட்டு மென்றான். இவன் மீண்டும் மடக்குக் கத்தியை எடுத்து விடுவானோ என்ற அச்சத்தில் நிதானமாக இருந்தவன் சுற்றிலும் திரும்பி அடிக்கடி பார்வையை ஓட்டிக் கொண்டான்.


தைரியம் அவன் உடலுக்குள் நுழைந்திருந்தது. மாமனாரின் அறைக்குள் ஒரு பீரோ ரொம்ப முழுப்பாட்டில்கள் இருப்பதை கவனித்திருக்கிறான். இனி அதுவெல்லாம் இவனுக்குத்தான். வீரம் விளைந்த பூமியாகிப் போனான். மாமனாரை சரக்கு பாட்டில்களுக்காக போட்டுத்தள்ளவும் இவன் தயார். சரஸ்வதியை நினைக்கையில் மீண்டும் மிரட்சியானான். போதை இறங்கிப்போனது. மிதிப்பாளே!


மீதமிருந்த சரக்கை ஊற்றி இந்தமுறை ஒமட்டல் இல்லாமல் மோர் குடிப்பது போன்று குடித்தான் ராம்தாஸ். சார்லி சாப்ளின் சரக்கடித்தாலோ பவுடர் சாப்பிட்டாலோ வீரம் விளைந்தது போல நெஞ்சை நிமிர்த்தி அமர்வது போல அமர்ந்தான். குத்துச்சண்டைக்கு தயாரானவன் போன்றிருந்தான்.


அந்த சமயத்தில் தான் ராமச்சந்திரன் திடீரென அழ ஆரம்பித்தான். ‘அழப்பிடாது நான் இருக்கேன் உங்களுக்கு!’ என்றான் இவன். திடீரென அழுகையை நிப்பாட்டி மூக்கை உறிஞ்சிக் கொண்டு இவனைப் பார்த்து, ‘நீங்க இருப்பீங்ளா சார் எப்பவும் எனக்கு?’ என்றான். ‘’நிச்சயமாக!’ என்றான் இவனும்.


அது போதும் சார்.. ரெண்டு யானை பலம் வந்தாப்ல இருக்கு எனக்கு. எனக்காக ஒன்னு பண்றீங்களா சார்!”


உங்களுக்காக எதை வேணாலும் செய்யலாமே! இப்ப என்ன செய்யுறதுன்னு சொல்லுங்க. டேபிளையெல்லாம் உருட்டித்தள்ளீட்டு போலாமா?”


அதெல்லாம் வேண்டாங்க சார். என் சம்சாரத்தை பார்த்தீங்க தானே நீங்க!”


ஆமாம்! எனக்கு துக்கிளியூண்டு டம்ளர்ல பால் குடுத்தாங்க!”


அவ எப்படி இருந்தா உங்க கண்ணுக்கு? நீர் யானை மாதிரி தானே?”


அப்படியெல்லாம் தப்பா அவங்க உடலை வர்ணிச்சு பேசக்கூடாது நீங்க! வஞ்சகமில்லாம நிம்மதியா சாப்ட்டா நமக்கும் தான் நீர்யானை ஒடம்பு வரும். நீங்க என் சம்சாரத்தை பார்த்தீங்கள் தானே?”


ஆமா, அவங்களும் நீர் யானை தான். நாம நீர் யானைகளை வீட்டுக்குள்ளார வச்சுட்டு சம்சாரம்னு பேரு வச்சு கூப்புட்டு இருக்கோம்.”


ஆமாங்க, அதென்னமோ ரோசனை பண்டுனா நிசம் தான். ஆனா என்னோட சம்சாரம் என்னை குத்து குத்துனு சும்மாநாச்சிக்கிம் அடிச்சுட்டே இருக்கறா! அவ அப்பன் ஒரு காலத்துல இந்த ஏரியா தாதாவாம். அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு! என் கஷ்டம் என்னோட! உங்களுக்கு வாய்ச்சது தங்கமான நீர்யானை!” சோகமாய் உருவெடுத்தான். இவனுக்கும் அழுகாச்சி வரும் போலிருந்தது. தப்பு ஆம்பிளை அழப்பிடாது!


சார் கையைக் குடுங்க சார்! கைய நீட்டுங்க!” இவன் நீட்ட அவன் கையை தன் கையால் பிடித்து குலுக்கினான்.


என் இனம் சார் நீங்க! உங்களைத்தான் சார் நான் தேடீட்டு இருந்தேன் நாலு வருசமா!”


எதுக்காக என்னை தேடிட்டு இருந்தீங்க? உங்க குடும்பத்துக்கு எந்த துரோகத்தையும் நான் செஞ்சதே இல்லையே! இன்னிக்கி தான் உங்களை மொத மொத பார்க்குறேன்


சார், தினமும் என் சம்சாரமும் சம்பந்தமே இல்லாம என்ன மிதிப்பா சார். ஷோபா மேல ஏறி எம் மேல விழுந்து, படாதபாடு படுத்துவா சார் என்னை. நானுங்காட்டி உசுரோட இருக்கேன் இன்னும். வேற எவனாச்சிமா இருந்தா அவனை பொதச்ச எடத்துல மரமே வந்து காய்ச்சிருக்கும். இன்னிக்கி நீங்க என் வீட்டில இருந்து போனதீம் ஆரம்பிச்சுட்டா சார்.


காரணமே இல்ல. ‘ஏண்டின்னு கேட்டேன் சார் அவளை. ‘புது வீட்டுல ஒதச்சிப் பார்த்தேன்னு சொல்றா!’ அதான் நேரா கிளம்பி உங்களை வந்து பார்த்தேன் சார். மிதிபட்ட உடலை சரக்கூத்தி ஆத்தலாம்னு தான். சார் என் சம்சாரத்தை நீங்க செட் பண்ணுங்க சார். கூட்டீட்டு ஓடினாலும் எனக்கு வருத்தமில்ல! உங்களுக்கு தெனமும் கோட்டர் வாங்கிட்டு வந்து குடுக்குறேன் சார். என்னையக் காப்பாத்துங்க சார்.”


கிசுக்கோணும்! அப்புறம் என் பொண்டாட்டி மிதிக்க ஆளில்லாம என்ன பண்டுவா? உங்களுக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா? நீங்க என் சம்சாரத்தை செட் பண்ணுங்க! மிதிக்கிறது ஒன்னைத்தவிர தங்கமான பொண்ணு சார். அடிக்கிற கை தான் அணைக்கும்னு சொல்றாங்கள்ள.. அப்படியானவ. கொழந்தை அவ. தெரியாத்தனமா மிதிச்சாலும் பண்டுதமும் பண்டுவா! ஆமா சரக்குல போறப்ப நீங்க உங்க சம்சாரத்தை வெளுத்து வாங்க மாட்டீங்களா?”


எங்க போயி வெளுக்குறது? இன்னொரு கோட்டர் குடிச்சன்னா வீட்டுல போயி மட்டையாயிடுறேன்! அப்புறம் விடிஞ்சு தான் கச்சேரி நடக்கும்.”


அப்ப ஒரு கோட்டரோட நிறுத்திக்கங்க!”


அது தப்பு! எங்க பரம்பரையே ஒரு கோட்டரோட கெடைய வுட்டு எந்திரிச்சதேயில்ல! அப்படி நடந்துடுச்சுன்னா வம்சமே கிளம்பி வந்து என்னை மிரட்டும்! அப்ப நாம அடுத்த கோட்டருக்கு ஆர்டர் போடுவமா சார்!” அடுத்த ஆர்டர் போடப்பட்டது புதிதாக. டேபிள் கிளீன் செய்யப்பட்டது. காடை வறுவல் ரெண்டு பிளேட் வந்தமர்ந்தது டேபிளில். சீக்கிரமாக பேசியபடியே முடித்தார்கள். ராமச்சந்திரன் தன்னோட ட்ரீட் என்று பணம் செட்டில் செய்தான். இருவரும் சாலைக்கு வந்து சேர்ந்தார்கள். மூன்று மணி ஆகியிருந்தது.


உங்க சம்சாரத்தை நான் கண்டிப்பா இன்னில இருந்தே செட் பண்ணனுங்ளா ராமச்சந்திரன்?” இருவரும் வீடு நோக்கி நடந்தபடியே பேசிச் சென்றார்கள்.


ஆமாங்க சார், நல்ல காரியத்தையெல்லாம் தள்ளிப் போடக்கூடாது நாம. முன் வச்ச காலையும் பின் வைக்கக் கூடாது! எங்க பரம்பரையில பின்னாடி காலை வச்சதேயில்ல முன்னாடி போறப்ப! உங்க பரம்பரை எப்பிடிப்பட்ட பரம்பரைங்க சார்?”


எங்களுது சூரியவம்சம் பரம்பரை. போதை கொறஞ்சிடுச்சா உங்களுக்கு? வாங்க இந்த வீதியில தான் என் மாமனாரு ஓல்டு தாதா இருக்கான். சரக்கு வச்சிருக்கான் பீரோல! ஆளுக்கொரு பாட்டில் எடுத்துட்டு போலாம்!”


நீங்க டைவர்ட் எடுக்காதீங்க சார். சரக்கு எப்ப வேணாலும் சாப்பிடலாம். மொதல்ல செட் பண்டணும்! உங்க சம்சாரம் வேற பத்திரமா கையைப்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டு வரச் சொல்லியிருக்காங்க! ஆமா அவங்களை சுலபமா என்னால செட் பண்ட முடியுங்ளா சார்?”


ரொம்ப ஈஸி! இதா என் வீடு வந்துடுச்சு பாருங்க! நீங்க மொதல்ல என் வீட்டுக்குள்ளார போய் என் சம்சாரத்தை செட் பண்டுங்க! நான் ஜன்னல்ல கரைக்ட்டா பண்றீங்களான்னு சரி பார்த்துட்டு உங்க வீட்டுக்குப் போறேன்!”


ஜன்னல்ல நின்னு பாக்குறது தப்புங்க சார்


தப்பில்லங்க நமக்குள்ள! நாம அக்ரிமெண்ட் போட்டிருக்கோம் ஆளு மாத்தி இழுத்துட்டு ஓடுறதா!”


ஆமால்ல! இந்தா நான் போறேன்! நீங்க பொறவுக்கே வாங்க! உங்க சம்சாரம் பேரென்ன?”


சரஸ்வதி!”


சரஸ்வதி! தங்கம்எங்கம்மா இருக்கே நீயி? மாமன் வந்திருக்கேண்டா செல்லம்!’ கதவுக்கருகாமையில் நின்று ராமச்சந்திரன் அழைத்தான்.


யார்டா அது செல்லம் போட்டு அழைக்கிறவன்?” கதவு நீக்கினாள் சரஸ்வதி. ராமச்சந்திரன் அவளைப்பார்த்துநான் தன் செல்லம் கூப்பிட்டேன்! மாமாடா!’ என்றவன் சரக்கிலிருப்பதை தெரிந்து கொண்டாள். ’சரி நீ உள்ளார வா! நீ இங்கயே இருஎன்று ராம்தாசை எச்சரித்து விட்டு கதவைச் சாத்திக்கொண்டாள். ராம்தாஸ் ஜன்னலுக்கு ஓடினான்.


உள்ளே, ‘ஐயோ!’ என்று ராமச்சந்திரன் அலறினான். இவன் ஜன்னலில் எட்டிப்பார்க்கையில் ஹாலில் கிடந்த ராமச்சந்திரனை நங்கு நங்கென மிதித்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி! புருசனின் அலறல் சத்தம் கேட்டு லட்சுமி ஓடி வந்து ஜன்னலில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த இவனை றெப்பட்டையை பிடித்து இழுத்துக் கிழே தள்ளி விட்டு ஜன்னலில் எட்டிப் பார்த்தாள்.


அவளுக்கு உயிரே போய் விடும் போலிருந்தது. ‘எம்பட புருசனை மிதிக்காதடி! அவரு எம்பட தங்கம்!’ கதவை நோக்கி சீலையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவள் கதவை ஒரே உதையில் திறந்தாள். உள்ளே ஓடிப்போய் சரஸ்வதியின் இடுப்பில் ஒரு மிதி. பின்பாக இருவரும் கட்டுமாறு கட்டிக் கொண்டு ஹாலில் உருண்டார்கள்.


ராம்தாஸ் நிதானமாக வீட்டினுள் நுழைந்து கதவைத் தாழிட்டான். கீழே மிதிபட்டு முனகிக் கொண்டிருந்த ராமச்சந்திரனை தூக்கி சோபாவில் அமர வைத்தான். ஹாலில் இரண்டு மலைப் பாம்புகள் சீறிக்கொண்டு கிடந்தன. இவன் தண்ணீரைக் கொண்டு வந்து ராமச்சந்திரன் முகத்தில் அடித்து நிதானத்துக்கு கொண்டு வந்தான்.


ஒன்னும் பிரச்சனையில்லங்க சார். நான் ஸ்டெடி! இந்த மிதியெல்லாம் எனக்கு ஜுஜூபி. இவங்க ரெண்டு பேரும் ஏன் சார் உருண்டுட்டு இருக்காங்க? பிரிச்சி விடுங்க சார் ரெண்டு பேரையும்! சண்டைக் கட்டிக்கிறாங்களாட்ட இருக்கு


கம்முனிருங்க உருளட்டும் அவிங்க! சரி நாம பெட்டு கட்டிக்கலாம். உங்க சம்சாரம் தான் ஜெயிக்கும். பெட்டு ஒரு ஃபுல்லு!”


இல்ல, நடக்காது போலிருக்கே! நீங்க தோத்துடுவீங்க சார். உங்க சம்சாரம் தான் ஜெயிக்கும். பெட்டு ரெண்டு ஃபுல்லு!.. என் சம்சாரத்தை நசுக்கிப் பிழிஞ்சுடுங்க மேடம்! நாம தான் ஜெயிக்கணும்!” எழுந்து உருளும் அவர்களை உசுப்பேற்ற லுங்கியை மடித்துக் கொண்டு நின்றான் ராமச்சந்திரன். இவனும் தான்! அவர்கள் மீண்டும் உருள ஆரம்பித்தார்கள் ஹாலில்.

000


நன்றி : புரவி 2021 ஜூலை

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்