அழைப்பு மணியோசை
என்கிற
காலிங்பெல் சப்தம்
செவியினுள்
சைக்கிள் மணியோசையாய்
விழவே
அருந்தியபடியிருந்த
அட்டகாசத்தை
அப்படியே டேபிளில்
பாதியோடு
வைத்துவிட்டு
யாரோவென முன்கதவை
நீக்கினேன்!
அங்கே யாருமில்லை!
குழப்பமாய் அறைந்து
சாத்திவிட்டு
நிம்மதியாய் டேபிளுக்கு
வருகையில்
மீண்டும் சைக்கிள்
மணியோசை
கேட்கவே, யாரேனும்
விளையாட்டை
ஆரம்பித்துவிட்டார்களா?
பக்கத்துவீட்டாளா
இல்லை அவன் துணைவியாரா?
எதிர்வீட்டு பாட்டியா
இல்லை தாத்தாவா?
யாராக இருந்தாலும்
விளையாடுவதற்கென
ஒரு நேரங்காலம்
என்றெதுவுமில்லையா?
தூத்தெறி மாதிரிச்செ!
சைக்கிள் மணியோசை
ஒலிக்க ஒலிக்கவே
மளாரெனத் திறந்தேன்!
காலிங்பெல் அடித்தது
நானேதான்!
000
காதல்கள் எல்லாம்
கள்ளியில்
பெயர் எழுதி வைப்பதோடு
கிராமியத்தில்
முடிந்து விடுகிறது!
சேர்ந்தவர்கள்
தங்களின் கள்ளியை
என்னாளிலும் சென்று
பார்ப்பதில்லை!
ஆனால் இந்த இழவெடுத்த
காதலன்
காதலி குட்டி போட்டு
வாழ்கிறாள்
என்று தெரிந்தும்
முன்பொரு காலத்தில்
காதலி இவன் பெயரை
கள்ளியில்
கிறுக்கி வைத்த
இடம் தேடி
நடையாய் நடந்து
இன்றையை தினத்தை
மட்டும் சிறப்பித்தான்..
வைத்துக்கொள்ளலாம்
இதுவும் காதலில்
சேர்த்திதான்
என்று வைத்து!
நகுலன் என் நடுவீட்டில்
அமர்ந்திருக்கிறார்
சக பைத்தியத்தை
சக பைத்தியம்
விரும்புவது போன்றே
அப்பாவுக்கு
நகுலனைப் பிடித்திருப்பதில்
எனக்கு
எந்தவித புகாருமில்லை!
அப்பா தான் வாழ்ந்த
காலத்தில்
இழவுகாரியங்களுக்கு
தோளில்
வெள்ளைத்துண்டிட்டு
சென்றதை நான்
கவனிக்கவேயில்லை!
– இதுபற்றி
கவிஞரான அவரிடம்
நல்ல கிர்ர்ரில்
விசாரிக்கையில்
நல்ல கிர்ரில் இருந்த
அவர் சொன்னார்..’
யார் இறப்புக்குச் சென்றாலும்
பாடையில் கிடத்தப்படும்
பிணம்
தன்னுடையதாகவே
என் கண்களுக்குப் பட்டமையால்!’
ஆக இழவு காரியங்களுக்கு
நாம்
தினமும் தான் செல்ல
வேண்டியிருக்கிறது!
எல்லாப்பிணங்களையும்
சுடுகாடு அனுப்பும்
மிகப்பெரிய சடங்கில்
நாம்
அங்கத்தினராய்
இருக்க வேண்டியிருக்கிறது!
கடைசியாய் ஊருக்குள்
எனை விட ஒருவயது
மூத்த நண்பரின்
பாடை சுடுகாடு
செல்கையில்
நான் எனது அப்பனின்
வார்த்தைகளை
நினைத்துக்கொண்டேன்!
என் பிணம் சுடுகாடு
செல்வதையும்
அதை நான்கு பேர்
தூக்கி வருவதையும்
தலைமையேற்று நானே
செல்வதையும்
உணருகையில்.. அது
அவ்வளவு
அற்புத சுகநிகழ்வாய்
இருந்தது!
0 கருத்துகள்