கையறுநதி -வறீதையா கான்ஸ்தந்தின்
இந்தப்புத்தகத்தை நாவலாக வாசித்தால் நாவலாகவும், சுயகுறிப்புகள் என்கிற வகையில் வாசித்தால் அவ்விதமே தோன்றக்கூடிய புத்தகம். ஆசிரியரின் எழுத்துக்களை முன்பு வாசித்ததேயில்லை என்கிற நினைவில் தான் வாசித்தேன். பின்பகுதியில் நிறைய புத்தகங்கள் வந்திருப்பதாக குறிப்பு சொல்கிறது. ஏற்கனவே எதிர்ர் வெளியீட்டில் வந்த வர்ளகெட்டு சிறுகதை தொகுப்பை வாசித்திருக்கிறேன். ஆனால் அதில் இன்று ஞாபகத்தில் ஒருகதை கூட இல்லை. என்னைப்பொறுத்தவரை இந்தப்புத்தகம் சுயவாழ்க்கை குறிப்புகள் என்கிற வகையில் வெற்றிபெற்றிருக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட தன் மூத்த பெண்ணை ஊர்மாற்றி ஊர் காப்பகங்களுக்கு அழைத்துச்சென்று விடும் தந்தை தன் வாழ்க்கையை இதில் சொல்கிறார். வாழ்க்கையில் பல மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் நம் அருகிலேயே தான் இருக்கிறார்கள். ஆனால் வெளிப்பார்வைக்கு அவர்கள் அப்படித்தெரிவதில்லை. பார்க்க பொறுப்பு மிக்க மனிதர்கள் போலத்தான் உங்களுக்கு அவர்கள் காட்சியளிப்பார்கள். போக பாதிக்கப்பட்டவர்களுக்கே தனக்கு மனநல கோளாறு இருப்பது தெரியாது என்பது தான் இதில் விசேசம்.
இந்தமாதிரியான விசயங்களை கோபிகிருஷ்ணன் தான் தன் கதைகள் வாயிலாக தமிழ் இலக்கியத்திற்கு கொண்டு வந்தார். ஒருசிலர் தங்கள் சிறுகதைகள் ஏதேனுமொன்றில். அந்த ஒருசில எழுத்து மட்டுமே எழுதிய ஆசிரியர்கள் தாங்கள் கண்முன் பார்த்த அல்லது மற்றோர் சொல்லி கேள்விப்பட்ட விசயத்தை எழுதி முடித்தார்கள் என்றே கொள்ளலாம். கோபிகிருஷ்ணன் எழுத்தை எல்லோருமே எளிதாக வாசித்துவிட இயலும். அதில் பகடிகள் பல உட்கார்ந்திருக்கும். ஆனால் அதில் ஒளிந்திருக்கும் வேதனைகளை வாசிப்போர் தான் உணர்ந்துகொள்ள வேண்டும். வாசகனை சோகக்குழியில் தள்ள அவர் முயற்சித்ததேயில்லை.
இந்த சுயகுறிப்பு புத்தகம் ஆரம்பம் முதல்கொண்டு வாசகனை பீதியிலேயே வாசிக்க வைத்துவிடுகிறது. அவை ஒருதந்தையின் பரிதவிப்புகளாக பதிவாகியிருக்கிறது. மகளின் மனநலபாதிப்பை சொல்ல வந்த குறிப்புகள் செல்லச் செல்ல வேறுபுறமும் தாவுகிறது. உச்சமாக அம்மாவின் இறப்பு வரை சொல்லும் பகுதி. குறிப்புகளை சொல்கையில் இடையிடையே தத்துவார்த்த வரிகள் போகிற போக்கில் வந்து வாசகனை யோசிக்கவும் வைக்கிறது.
புத்தகத்தை வாசிக்கும் வாசகர்கள் சீக்கிரமாக மகள் மனநலபாதிப்பிலிருந்து விடுபட்டாரா? விடுபட வேண்டுமே.. என்று எண்ணுகிற அளவு நிதானமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தன் முழு வாழ்க்கையையுமே சொல்லி முடித்த புத்தகம் இது.
சாலையில் நாம் கண்ணுற்றிருக்கலாம். தாடிவைத்த, உடைகள் அழுக்கேறிய மனிதர்களை. அல்லதாக சேலைகளை கலைந்து நிர்வாணமாக பொது இடத்தில் நடக்கும் பெண்மணியை. மனநலம் குன்றிய அவர்களை நாம் ’பைத்தியாரக்கருமங்கள்.. பூமிக்கி பாரமாய் திரியறதுகள்!’ என்று ஏசியிருக்கலாம். அதன் உச்சமாக ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாய் சேர்த்து கைக்கு கிடைத்ததை வைத்து தாடிக்கார கிழிந்த உடை மனநலம் பாதிப்படைந்தவனை அடித்து துவைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை!
நீங்கள் அப்போது கவனித்திருக்கலாம்..
சிவப்பு நிற திரவம் அவன் மண்டையிலிருந்து முகத்தில் வழிந்து கொண்டிருக்க.. அவன் மெலிதான வசீகர புன்னகையுடன் அடிவாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தத்தின் சுவற்றில் முதுகை முட்டக்குடுத்தபடி!
வெளியீடு - கடல்வெளி. விலை- 220.
For Copies : Whatsapp - 9442242629
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக