வா.மு.கோமு கதையுலகம் - சு.வேணுகோபால்


 

வா.மு.கோமுவின் கதையுலகில் ஒரு ஊரின் அத்தனை முகங்களும் அசலாக எழுந்துவருகின்றன. ஒடுக்கப்பட்ட சாதிசனங்களின் பாடுகளும் மிதிபடல்களும் இன்னும் அழுத்தமாகவே எழுந்துவருகின்றன. அவர்களின் சுயகேலிகளும் மேலாதிக்கச் சமூகம் தரும் நெருக்கடிகளை வெகு நுட்பமாக பகடிகளோடு வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் அவர்களுக்கே உரிய குசும்புகள், துடிப்புடன் வெளிப்படுகின்றன. அவர்களின் மீதான பரிவு என்பதைவிட நியாயங்கள் மீதான வெளிச்சம் விழுகின்றன.

 

பரிவு என்பதையோ அரசியல் சார்புகளையோ இவர்கள் மீது ஒரு சுமையாக போர்த்துவதில்லை. இது ஒரு துணிச்சலான காரியம். சாதிய சமூகத்தில் அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ அதை அவ்வண்ணமே உருவாக்கிக்காட்டுகிறார். அவர்களின் கூத்தும் குடிகளும் சீரழிவும் அதனுள் வெளிப்படும் தார்மீகக் கோபங்களையும் சேர்த்தே காட்டுகிறார். மாந்தர்கள் வெறுமனே கருப்பு வெள்ளையாக இல்லை. சலவைத்தொழிலாளி துணி வெளுப்பவராக மட்டுமே தோற்றம் கொள்வதில்லை. காடுமேடு என ஓடும் வேட்டைக்காரனாக இருக்கிறார். நாவிதர் இழவு சொல்பவராக மட்டுமே இல்லை. ஊர் உலக இரகசியங்களை அள்ளி வீசுகிறார். தலித் சிறுவன் ஆடுமேய்ப்பவனாக மட்டுமே நடமாடுவதில்லை. மற்ற சாதியர் கூடும் சாவக்கட்டில் தன் சாவலை இறக்கி வெல்பவனாக இருக்கிறான். பண்ணை வேலையாள் படல் கட்டுகிறவராக, கூரைமேய்கிறவராக, கொத்தனாராக பல வேலைகள் தெரிந்தவராக இருக்கிறார். இப்படி பன்முகம் கொண்டிருப்பதை மெனக் கெடாமல் வலுவான மாந்தர்களாக உருவாக்கி உலவவிட்டிருக்கிறார்.

 

முதல் பத்தாண்டு கதைகளில் விசயங்களை நுணுக்கமாகவும், அதற்குப் பின்னான கதைகளில் வெளிப்படை தன்மையோடும் உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு ஆண்களும் ஒவ்வொரு ரகம். என்றாலும், பெண்கள் தங்களை வலுவாக வெளிப்படுத்திக்கொள்கின்றனர். 'திருவிழாவுக்கு போன மயிலாத்தாள்', 'அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்', 'எக்ஸெல் சூப்பர்', 'மஞ்சள் நீராட்டு', 'ஏச்சு பன்னாட்டு இவளுக்கெதுங்குங்க சாமி', 'டெய்சி டீச்சர்', பிலோமி டீச்சர்', 'என் செல்லம் என்னிக் கொல்லுதாமா', 'வுட் யூ லைக் ஈட் ஃப்ரூட்?', 'துரதிஷ்டக்காரன்' கதைகளில் வரும் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருக்கின்றனர்.

 

காதலும் காமமும் இவரது கதைகளில் இடையறாது மோதிக் கொள்கின்றன. காமம் காதலைப் பந்தாடிவிடும் வலிமை கொண்டதாக இருக்கிறது. காமம் துரோகத்தின் வேரைப் பற்றியபடி இருக்கிறது. 'அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்' கதையில் வரும் சுந்தரம் மனைவி ரோஸ்மேரியை விட்டு வேறொருத்தியோடு ஓடிப்போய், திரும்ப வந்து மேரியை சமாளிக்கிற விதம் - அந்த வீட்டை எட்டிப் பார்த்துக் கேட்பதுபோல இருக்கிறது. காதல் என்ற நம்பிக்கைக்கு வெளியே கூட்டுக்கொண்டாட்டமாக அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறது 'பிலோமி டீச்சர்' கதையில்.

 

வா.மு.கோமுவின் தந்தையாரை நான் பார்த்ததில்லை. அவரது படைப்புகளை கோவை ஞானி ஒரு நூலாக வெளியிட்டிருந்தார். அதை அந்தப்பொழுதிலே படித்தேன். ஞானியிடமும் அவரைப் பற்றி கேட்டேன். அவரது படைப்பு சார்ந்தும் வேலை சார்ந்தும் சொன்னார். வா.மு. கோமு தன் தந்தையாரை நான்கு ஐந்து கதைகளில் கொண்டு வந்திருக்கிறார். எதிர்மறை பாத்திரமாகவும் நேர் மறை பாத்திரமாகவும் காட்டியிருக்கிறார். அவரது இலக்கிய ஈடு பாட்டை சொல்லும் போதும், மகன் குறித்து அவர் கொண்டிருந்த அக்கறையைச் சொல்லும்போதும் நிரந்தரத்தும் கொள்ளும்படி செய்துவிட்டார். மிகையாக ஏதும் சொல்லவில்லை, சொல்லப்போனால் தந்தையையும் பகடி செய்கிறார். அதையும் மீறி அசலான -கனவுகள் நிரம்பியிருந்த ஒரு மனிதனைக் காட்டிவிட்டார்.

 

சில கதைகளில் சில சாத்தியங்களை நிகழ்த்திப் பார்க்கிறார். அவை புனைவு கொண்ட விதம் நிஜ உலகிற்கு நிகராக இருக்கின்றன. படைப்பாளியே சென்று பார்த்த புதியபாதை. அந்த பாதையில் மானிட இரகசியங்கள், கற்பனைகள் வெளிப்படுகின்றன. அவை போலி புனைவாக, அர்த்தமற்ற புனைவாக இல்லை என்பது முக்கியம். பயணப்படாத உலகில் புனைவின் வழி பயணத்திற்கு நம்மையும் அழைத்துக் காட்டுகிறார். அவை ஏன் நெருக்கமாக இருக்கின்றன என்றால் நிகழும் பண்பாட்டு நிகழ்வை ஒரு பின்னணியாக கொண்டு நிகழாத கதைகளை நிகழ்த்தியிருக்கிறார். 'மண்பூதம்', 'பியோத்தர்', 'மஞ்சள் நீராட்டு', 'குருவி எங்கே திருமதி', 'ஐயனார் வருகிறார் குதிரை மீது', 'தவளைகள் குதிக் கும் வயிறு' போன்ற கதைகள் இவ்வகையில் சிறப்பாக உருவாகி யிருக்கின்றன.

 

வா.மு.கோமு எழுதும் பின் நவீனத்துவக்கதைகள் என்று சொன்னாலும் சரி, மனப்பிறழ்வெழுத்து, பகற்கனவெழுத்து, மாய எதார்த்த எழுத்து, உதிரி குணரூப எழுத்து என்று சொல்லிக் கொண்டாலும் சரி, அக்கதைகளில் அந்நியத்தன்மை இல்லை. வறண்ட கொங்கு பிரதேசத்தின் மணம் ஒன்று கமழ்கிறது. கோடை- கால இரவில் வீசும் காற்றில் வெப்பக்காற்று கொத்துப்படலமாக திடுக்கென்று வந்து தாக்குமே அப்படித்தாக்குகிறது. முக்கியமாக அந்தக் கதைமாந்தர்களின் கற்பனை உலகம் அல்லது மனஉலகம் பண்பாட்டுப் பின்னலிலிருந்து உருக்கொள்கிறது. விபரிக்கப்படும் கதைச்சூழலில் கதைமாந்தர்கள் கொள்ளும் மனச்சஞ்சாரங்கள் வாசகனின் சஞ்சாரங்களாக மாறுகின்றன. அந்த நெருக்கம் இவ்வகையான கதைகளுக்கு ஒரு ஒரிஜினாலிட்டித் தன்மையை உண்டாக்குகின்றன. இக்கதைகளைத் தமிழின் நல்வரவு என்பேன்.

வா.மு.கோமு, ஜி.நாகராஜன், ராஜேந்திரசோழன் விட்ட இடத்தை இன்னும் விரிவுபடுத்துவதாக இருக்கிறார். ஜி. நாகராஜன் காட்டிய உலகம் வேசையர்களின் உலகம். வா.மு.கோமு காட்டும் உலகம் குடும்பமாந்தர்களிடையே வெளிப்படும் பாலியல் மீறல்களைக்கொண்ட உலகம். அதன் ஜாலங்கள், பம்மாத்துக்கள், தந்திரங்கள், ஏமாற்றுக்கள், சாகசங்கள், துணிச்சல்கள், பாசாங்குகள், கள்ளத்தனங்கள், துரோகங்கள், ஆசைகள், வக்கிரங்களால் காட்டுகிறார். பெரும்பாலும் கணவனால் கைவிடப்பட்ட, ஒதுங்கிக்கொண்ட பெண்கள் உலகமாக இருக்கிறது. அவர்களின் பாலியல் மீறல்கள் அல்லது அந்த சூழலில் மாட்டிக்கொண்ட பெண்களின் ஆசாபாசங்களைப் பேசுகின்றன.

 

கதாமாந்தர்களைப் பொறுத்த அளவில் ராஜேந்திரசோழன் காட்டியது போன்று வலுவான குணச்சித்திரங்கள் கொண்ட மாந்தர்கள். முக்கியமாக பெண் பாத்திரங்கள். இது ஒரு புரிதலுக்காகத்தான்.

 

இந்த ஒப்பீட்டைத் தாண்டி அல்லது முன்னோடிகளின் சாயலைத் தாண்டி வா.மு.கோமு காட்டும் பெண்கள் வலுவாகவே இருக்கின்றனர். ஆண் பாத்திரங்கள் இன்னும் இன்னும் அசலானவை.

 

கொங்குபிரதேசத்தில் இருந்து இன்று எழுதுபவர்களில் வா.மு. கோமு எழுத்துக்களில்தான் நட்சத்திரங்கள் பளிச்சென விண்முழுக்க பூத்துக்கிடப்பது போல கொங்குமொழி குதியாலம் போட்டுக்கொண்டு வருகிறது. இது ஒரு விதக் கவர்ச்சியைத் தருகிறது. முக்கியமான அம்சம் கோட்பாடுகளையும் இயக்கச் சார்புகளையும் முற்றாக ஒதுக்கிவிட்டு ஒரு காட்டாறு தனது பாதையை உருண்டு புரண்டு நுரைத்தபடி ஏற்படுத்திசெல்வது போல தனது பண்பாட்டு இழைகளைத் தழுவிக்கொண்டு எழுந்து வருகிறது. நேற்றைய தலைமுறையின் கண்களில் இருந்து எழுதாமல் இன்றைய கதியில் அது எப்படி கேலிகளோடும் புது பழக்கவழக்கங்களோடும் உயிர்பெறுகிறதை சித்திரமாக்கியிருக்கிறார். இன்றைய நடைமுறைச் சித்திரம் எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் வெகுவாக பற்றிப்படர்கிறது. புற இலக்கியத்தின் ஓசைகளை, காட்சிகளை, உணர்வுகளை, நடமாட்டங்களை, நுட்பங்களை விவரிக் கும்போது கொங்குமணம் கமழ்கிறது. உயிரோட்டம் என்கிறோமே அது இந்த வகையில் தான் சிறப்பாக இருக்கிறது.

 

விவரணையில் கூடுதலாக ஒரு வரி விழும்போது அது எள்ளல் மிக்கதாக அமைந்து ஈர்க்கிறது. இது வா.மு.கோமுவின் ஸ்பெசல் என்று சொல்லலாம். வாய்விட்டு சிரிக்கவைக்கிறது. சில சமயம் கண்ணீர் முட்ட முட்ட சிரிப்பை அடக்க முடியாமல் ஆக்குகிறது. 'அப்பொருள் மெய்ப்பொருள்', 'குருவி எங்கே திருமதி', 'அவிங்க விங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்', 'மண் பூதம்' முதலிய கதைகளில் இவ்வம்சம் மிக அழகாக கூடிவந்திருக்கின்றன.

மொழியில், உரையாடலில் கூடிவரும் எகத்தாளம், எள்ளல், துடுக்குத்தனம் மாந்தர்களின் மிக அருகில் ஈர்த்து அமரவைத்துவிடுகின்றன. மனிதர்கள் அவ்வவ் கணங்களில் நினைப்பதை நினைக்கிற வார்த்தைகளில் கொண்டுவந்துவிடுகிற சாத்தியங்களால் அழகு கூடுகிறது. பழைய நடைமுறைகள் பின்நகர்ந்து புதிய நடைமுறைகள் வந்து சகஜமாகிவிட்டதை ஒரு அனுபவமாகத் தருகிறது.

 

நம்மை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் உரசிக்கொண்டு செல்லும் சாதாரண ஜனங்களின் கதைகள் இவை. மிக அருகில் இருக்கிறார்கள். தன் போக்கிலான குணங்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களது துணிச்சல்கள், கொண்டாட்டங்கள், குஷிகள், சண்டைசச்சரவுகள், பிடிவாதங்கள், உதறிவிடும் குணங்கள், சரிவுகள் எல்லாம் இயல்பானவையாக இருக்கின்றன.

 

வா.மு.கோமு எழுத்துக்களின் மீது வேறு வகையான விமர்சனத்தை வைக்க இந்த 60 கதைகள் கொண்ட தொகுப்பில் பெரிதாக இல்லை என்றாலும் சிற்சில இருக்கின்றன. இதில் தொகுக்கப்படாத கதைகளை படிக்கும் போது என் பார்வை வேறுபடலாம். இத்தொகுப்பிலே மிக மிக அடர்த்தியாகவும் நேர்த்தியாகவும் நவீன மனங்களோடு கூடி வந்த சில கதைகளில் முடிவு சார்ந்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. கொஞ்சம் கவனம் கொண்டு இருந்தால் செம்மைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அக்கதைகளின் பரப்பு உருவாக்கிய சித்திரம் மிக நேர்த்தியாக இருக்கின்றன.

 

வா.வே.சு ஐயர் காலத்திலிருந்து பெண்களின் துன்பங்களுக்கு எழுத்து அனுசரணையாக இருந்து தொடர்ந்து வருகிறது. வா.மு. கோமுவின் கதைகள் பெண்களின் கண்ணீருக்கு எதிர் துருவத்தில் பெண்களின் காமத்தைப் பேசுகின்றன. மற்ற எழுத்தாளர்களால் பேசப்படாத புது உலகமாக இருக்கிறது. புனிதப்படுத்தப்பட்ட பெண்களின் தோற்றங்களை உடைத்துக்கொண்டு நிஜத்தைக் காட்டுகின்றன. சொல்லப்போனால் பெண்களும் சகல தந்திரங்கள் மிக்கவர்களாக இருக்கின்றனர். 10 வயது சிறுமி முதல் கிழவி வரையும். கிளுகிளுப்புக்காக எழுதுகிறார், வலிந்து கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்பது போன்ற விமர்சனம் பொது வெளியில் உலவுவதாக கேள்விப்பட்டதுண்டு. இந்த 60 கதைகளில் கொண்ட தொகுப்பில் (இரண்டு கதைகள் தவிர) கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. எங்குமே துருத்தலாக இல்லை. மாந்தர்களின் உரையாடல்களிலிருந்தே வெளிப்பட்டிருக்கின்றன. சூழலுக்கும் உணர்வுகளுக்கும் இயைந்தே வெளிப்பட்டிருக்கின்றன. காமலீலைகளை நாசுக்காகச் சொன்ன கதைகள் உண்டு. கொஞ்சம் அப்பட்டமாக காட்டுகிற கதைகள் உண்டுதான். காமத்தின் வினோதங்களைச் சொல்வதாக இருக்கின்றனவே தவிர, பைங்கிளி கதைகளாக தாண்டிவிடுவதில்லை. அக்கண மகிழ்வின் கொஞ்சட்டைகள் இருக்கின்றன. இப்பாலியில் சார்ந்த கதைகளில் ஆட்டிக் குலைக்கும் காமத்தால் எல்லை மீறியவர்கள் எப்படி அதில் சிக்குண்டு தத்தளிக்கின்றனர். அதிலிருந்தும் மீள்கின்றனர் என்று புள்ளியில் போய்முடிகின்றன. நாசுக்காக தொட்டுக்காட்டிய கதைகளில் புற உலகம் மிக வலுவாகவும் காமத் தத்தளிப்புகளை வெளிப்படையாகச் சொன்ன கதைகளில் அக உலகம் வலுவாகவும் உருவாகியிருக்கின்றன.

 

இந்த கவர்ச்சி மிக்க உலகத்திலேயே இன்னும் இன்னும் நிரம்ப எழுத இடம் இருக்கவே செய்யும். உண்மையும் கூட. ஒரு படைப்பாளியாக வேறு பிரச்சினைகளிலும் வா.மு.கோமு தன் கவனத்தை குவிக்கவேண்டும். அதிலே நிரம்ப எழுதவேண்டும் என்பதே என் ஆசை. அது வா.மு. கோமுவின் படைப்புலகத்தை அகலப்படுத்தும். பல்வேறு சிக்கல்களைத் தொடும்போது படைப்பாளியின் ஆகிரிதி உறுதிப்படும். மகத்தான படைப்புகள் கிடைப் பதற்கான ஒரு பயணம் இது.

 

வா.மு.கோமுவின் தேர்வு பாலியல் உலகம் சார்ந்து அதிகம் இருக்கிறது. அதே சமயம் இலக்கியம் அல்லாத (அவரே ஒதுக்கிய கதைகள் நிரம்ப உண்டு) எழுத்துக்களை எழுத வேண்டுமா? அதாவது நேரத்தை வீணாக்க வேண்டுமா என்று கேட்டுக்கொள்வது நல்லது. அதுதான் புவ்வாவிற்கு வழி பண்ணுகிறது என்று சொல்வாரேயானால் ஒரு கலைஞனாக பட்டினியைக்கூட தேர்வு செய்யலாம். தமிழ் சமூகத்தில் இது ஒரு சிக்கலான பிரச்சினை- தான். என்றாலும் நம் முன்னோடிகள் உண்டாக்கிய கனவுப்பாதை அத்தகையதாக இருக்கிறது. எதுவானாலும் வா.மு.கோமுவை இந்த இடத்தில் திசை திருப்ப விரும்பவில்லை. நெருக்கடி மிக்க தமிழ் வாழ்வை எழுதி மீண்டும் ஒரு சரிவில் விழவா என்று அவர் கேட்டால் நல்ல பதில் இல்லை. இவ்விடத்தில் என் ஆசையை மட்டுமே முன்வைக்கிறேன்.

 

எவை இலக்கியத்தகுதிக்கு உரியவை, எவை அல்லாதவை என்று தெரிந்த எழுத்தாளன். அவரது ஆக்கத்தில் கலைத்துவம் கூடி வரும் பல சிறப்பான அம்சங்கள் உண்டு. ஒன்றைச் சொன்னால் புரிந்துவிடும். நிகழ்காலத்தில் தோன்றும் மனநிலையை எழுதிவிடக்கூடியவர். இப்படி பல வலுவான படைப்புச்சக்தி உள்ள கலைஞன் வா.மு.கோமு.

 

இத்தொகுப்பிலே 'திருவிழாவுக்கு போன மயிலாத்தாள்', 'காசம் வாங்கலையோ காசம்', 'ஏண்டா குப்பா வேட்டையா?', 'அவிங்க விங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்', 'எக்ஸெல் சூப்பர்', எச்சுப் பன்னாட்டு இவர்களுக்கு எதுக்குங்க சாமி', 'அப்பொருள் மெய்ப் பொருள், 'ஐயனார் வருகிறார் குதிரை மீது', 'பிலோமி டீச்சர்', 'குட்டிப்பிசாசு', 'இனி ஒன்றையும் மறைச்சு வைக்கமுடியாது' முதலிய கதைகள் தனித்துவமானவை. வா.மு.கோமுவுக்கு பேர் சொல்பவை. எனக்கு மிகவும் பிடித்த கதைகள்.

 

இந்தத் தொகுதியை ஒரு விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிப்பார்க்கலாம்.

 

'ஏன்டா குப்பா வேட்டையா', 'துரதிஷ்டக்காரன்', 'டெய்சி டீச்சர்' கதைகளின் முடிவு சரியாக அமையவில்லை. துரதிஷ்டக்காரன் கதையில் விபச்சாரவிடுதிக்குச் செல்லும் கதைநாயகன் அங்கு அம்மா ஓடிவந்து நிற்பதாகக் காட்டுகிறார். அவனுக்கு வயது 30 என்றால் தாய்க்கு 50 இருக்கும். மட்டுமல்ல அங்கு மகனைக் கண்டு அதிர்ச்சியோ, சங்கடமோ கொள்ளாமல் வளைந்து போஸ் தருவதுபோல நிற்பதாகச் சொல்வது செயற்கையாக இருக்கிறது. இது ஒரு வெற்று அதிர்ச்சிதான். இயல்பாக கூடிவந்த திருப்பம் இல்லை.

 

'ஏன்டா குப்பா வேட்டையா?' கதையில் தன் சொந்த நாயைக் கொன்று உடும்புக்கறி என்று கவுண்டருக்கு கொண்டுசெல்வதாக முடிப்பதும் வெற்று அதிர்ச்சி திருப்பம்தான். என்ன இருந்தாலும் தன் சொந்த நாயை கொன்று இது உடும்புக்கறி என்பது செயற்கையாக இருக்கிறது. அவனோடு அன்று மட்டுமல்ல அதற்கு முன்பும் பல நாட்கள் வேட்டைக்குச் சென்று உதவிய சொந்த நாயை அப்படியெல்லாம் செய்துவிடமுடியாது. வேண்டுமென்றால் அந்த இடத்திற்கு ஆவலோடு வந்த ஒரு பொட்டைநாயைக் கொன்று உடும்புக்கறியாக கொண்டு சென்றான் என்றால் பொருத் தப்பாடாக இருந்திருக்கும்.

 

'இனி ஒன்றையும் மறைச்சு வைக்கமுடியாது' கதையில் தன் சிறு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாத்தியார் கவுண்டரை சிரைக்கவரும் சமயத்தில் நாவிதர் குஞ்சை அறுத்து எறிவது என்ப தில் நடப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. செய்யத் துணிவு வராமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

 

டெய்சி டீச்சர்' கதை ஜி. நாகராஜனின் 'மிஸ் பாக்கியம்' கதையின் பாதிப்பில் எழுதப்பட்டுள்ளது போல இருக்கிறது. பிளஸ் டூ மாணவனை பியூஸ் போட அழைப்பது போல அழைத்து இன்பம் துய்க்கத் திட்டமிடும் டெய்சி டீச்சர் பித்து பிடித்தது போல நடந்து கொள்வதும், கதை நெடுக பிளஸ் டூ மாணவன் காமப்பார்வை செலுத்திவிட்டு டீச்சர் வீட்டுக்கு வந்து அவள் அணைப்பை வெறுத்து வேண்டாம் என்பதும், நம்பும்படியாக இல்லை. அவள் வெறிகொண்டு அணுக இவன் தடியால் மண்டையைப் பிளப்பதும்

சரிவரவில்லை. கதையைக் கண்டபடி நடத்தி வாசகருக்கு ஒரு வித்தியாசமான முடிவை தர நினைப்பதுதான் துருத்திக்கொண்டு நிற்கிறது. 'வுட் யூ லைக் ஃப்ரூட்?' கதையில் அப்பாவை 28 வயது மகன் வாடா போடா நாயே என்று அழைப்பது வாசகனுக்கு வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்குத்தான். அவர் சிறு நூற் பாலை வைத்திருப்பவர். இந்த கதையில் பேசப்படும் கெட்டவார்த் தைகள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. 'பிலோமி டீச்சர்' கதையில் வெளிப்படும் கெட்டவார்த்தைகள் சூழலுக்கும் உணர் வுக்கும் பொருத்தமாக இருப்பது போல இந்தக் கதையில் இல்லை. 'நீங்க முருங்கக்காடு போயிருக்கீங்களா?' கதையில் வரும் மனம் பேதலித்தவன் விடும் கதை, ரஷ்ய பூமியில் வைத்து எழுதிப்பார்த்த பியோத்தர்' காதல்கதை புதிதாக எதையும் சொல்லவில்லை.

 

தன்னை எய்ட்ஸ் தொற்றியிருக்குமோ என்று அப்பாவுடன் பரிசோதனைக்குச் செல்லும் 'முகமூடி உடன்படுகிறது, ஜெயமோகனை கிண்டல்செய்து எழுதியிருக்கும் 'சேகுவேரா வந்திருந்தார்' கதை யெல்லாம் படித்துப் பார்க்கலாம் லெவலில்தான் இருக்கின்றன. பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை.

 

பாலியல் மீறல்கள் எல்லாசாதிக்குள்ளும் நிகழ்வதை மனத்தடை இல்லாமல் சொல்லியிருக்கிறார். கவுண்டர் ஒடுக்கப்பட்ட சாதியாரின் பெண்ணிடம் உறவு வைத்திருப்பது போலவே அருந்ததியன் கவுண்டர் வீட்டுப்பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான். பழகும் நண்பர்களிடையே, வேலைசெய்யும் முதலாளியிடையே, விடலைப் பையன்களிடையே கள்ளஉறவு நேரவே செய்கிறது. பெண்கள் இதில் துணிந்தவர்களாக இருக்கின்றனர்.

 

பள்ளிக்குச் செல்லும் சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலைச் செய்வதை வலுவாகச் சொன்ன கதை 'இனி ஒன்னையும் மறைச்சு வைக்க முடியாது'. கவுண்டர் இன அரசியலில் -அவர்களுக்கு சார்பாக இருந்த அருந்ததியப் பெண் எல்லாவிதத்திலும் தோற்றுப்போவதை சொல்லும் ஏச்சு பன்னாட்டு இவளுக்கு எதுக்குங்க சாமி' கதை முக்கியமானது.

இந்த 'செல்' வந்தபின் இளம் பெண்கள் பல ஆண் நண்பர்க ளைச் சுற்றவிடுகிற குட்டிப்பிசாசு போல இருக்கின்றனர். 'குட்டிப் பிசாசு' கதை தேர்ந்த கைகாரியை குறிப்பதாகவும் இருக்கிறது. மக்களை ஆட்டிவைக்கிற கைபேசியை குறிப்பதாகவும் இருக்கிறது என்ற இரு துருவங்களிலும் பொருந்திச் செல்கிறது.

 

'என் செல்லம் எண்ணியக் கொல்லுதாமா' கதையில் வரும் வம்புக்காரி ராஜேந்திரசோழன் கதையான 'புற்றில் உறையும் பாம்புகள்' கதைக்காரிபோல இருக்கிறாள். நிதானித்தும் நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருக்க வேண்டிய கதை. கண்ணாபின்னாவென்று கொட்டி வைத்தது போல ஆகிவிட்டது. அதில் சொல்லப்படும் மன்மத லீலை எப்படி பெண்ணை வீழ்த்துகிறது என்பதெல்லாம் சரிதான். ஒருமை கூடிவரவில்லை.

 

தலித்தியர்கள் விரும்பும்விதமாக எழுதப்பட்ட கதைகள் இருக்கின் றன. அது ஒரு காலத்தின் பரபரப்பு. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, உறவுச் சிக்கல்கள், புதிய நாகரீகம் இவற்றைச் சொல்லும் கதைகளாக இருக்கின்றன. வித்தியாசமான மனிதர்கள், கொங்கு மக்களிடம் மெருகேறிவந்த வழமையான மொழி இவரின் கதை உலகிற்கு தனித்துவத்தை அளிக்கின்றன. மகத்தான கதைகள் இவைகள் என்று எடுக்க இவற்றில் ஏதும் இல்லை. நல்ல கதைகள் உண்டு. சிறந்தவை இனிமேல்தான் எழுதப்பட வேண்டும்.

 

மணல்வீடு இதழும் களரி தொல்கலைகள் மையமும் இணைந்து இவ்வாண்டுக்கான கு. அழகிரிசாமி விருதைப்பெறும் சகத்தோழனும் படைப்பாளியுமான வா.மு.கோமுவை நெஞ்சார வாழ்த்துகிறேன்.

venugopal@thaiveedu.com

 

 


கருத்துகள் இல்லை: