என் பெயர் ராஜா


            குழந்தைகள் கதைகள் என்றாலே விலங்குகளும், பறவைகளும், மரங்களும் இன்றி பூர்த்தியாகாது. ஏன் குழந்தைகள் கதைகள் அனைத்திலும் விலங்குகளும் பறவைகளும் வருகின்றன என்று ஒரு முறை யோசித்து கொண்டிருந்தேன். அப்போது பிரபஞ்சன் அவர்களின் மயில் இறகு குட்டி போட்டது என்ற  ஒரு கட்டுரைத் தொகுப்பு  வாசித்துக் கொண்டிருந்த போது அதில் என் கேள்விக்கான விடை கிடைத்தது. இந்தப் பிரபஞ்சம் என்பது மனிதனுக்கு அது மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் ,மரங்கள் இவை எல்லாவற்றுக்கும் ஆனது என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவதற்காக தான் நம்முடைய ஒவ்வொரு கதைகளிலும் இவை அனைத்தும் கட்டாயம் இடம் பெறுகின்றன. 

           இந்த நூலும் சிறார்களுக்கான ஒரு நூல்தான். வாழ்க்கையில் பல மனிதர்களின் சுய சரிதை படித்திருப்போம். இந்த நூல் ராஜா என்ற நாய் தன்னுடைய சுயசரிதையை சொல்வது போன்று இருக்கும். இதே போல் பூனாச்சி என்ற ஆட்டுக்குட்டி என்ற நூல் ஒரு ஆட்டுக் குட்டி தன் சுய சரிதை சொல்லுவது போல இருக்கும். இந்த இரு நூல்களும் வாசிக்க சிறப்பான நூல்கள். 

              ராஜா என்கிற கோம்பை நாய் ராஜபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் ராணி என்ற நாயின் குழந்தை. ராணி என்கிற நாய் ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்று எடுத்து இருந்தது. அதில் தலைப்பிள்ளை தான் ராஜா. ஒரு பெரிய வீட்டில் முகப்பு கதவு சாத்தியே இருக்கும். 5 குட்டிகளும் சுவர் தாண்டி வெளியே செல்ல முடியாமல் அந்த வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் சுற்றி சுற்றி விளையாடும்.  மூணு மாதம் கழித்து கடைசி மூணு குட்டிகளை காரில் எடுத்துச் சென்று அந்த வீட்டு பெண்மணி விற்பனை செய்து விட, ராஜாவுக்கு சிறிது கலக்கம் வருகிறது. ஆஹா .. நம்மையும் அம்மாகிட்ட இருந்து பிரிச்சி விடுவாங்களோ....என்று பயந்து கொண்டே இருந்தது. ராஜா பயந்தது போலவே ஒரு நாள் நடந்துவிட்டது. தன் தாயிடமிருந்து பிரித்து அந்த பெண்மணி தன் தந்தையின் வீட்டிற்கு காவல் காப்பதற்காக எடுத்துச் சென்றுவிட்டார். ஒரு ஆறுதல் வேறு எங்கும் கொண்டு விடாமல் தன்னுடைய இரத்த பந்தத்தில் விடுகிறார்களே என்று ராஜா ஆறுதல் கொண்டது. 

                புது வீட்டிற்கு போனதும் அதற்கு மகிழ்ச்சி பெரிய பங்களா போன்ற வீடு தோட்டம் என்று சுற்றி சுற்றி ஓடி வந்தது. அங்கு போன பிறகுதான் அதற்கு ராஜா என்று அந்த வீட்டுக்காரர் பெயர் வைக்கிறார். அந்த வீட்டுக்காரர் கழுத்தில் ஒரு பெல்ட்  போட்டு ராஜாவை கட்டி வைத்து விடுகிறார். வெளியே எங்கே போனாலும் ராஜாவை கூட்டி செல்வது அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேட்டைக்கு செல்லும் பொழுது கூட ராஜாவை உடனழைத்துச் செல்வார். 

          அடுத்த வருடம் மீண்டும் ஒரு குட்டி அந்த வீட்டிற்கு வருகிறது. அது தான் இரண்டாவது பிரசவத்தில் தன் தாய்  ஈன்ற குழந்தை. தன்  தம்பி தான் என்று ராஜா மகிழ்ச்சி கொண்டு, நம் தம்பி நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சந்தோஷத்தில் இருக்கிறது. அதற்கு டாமி என்று பெயர் வைக்கிறார்கள். 

      இந்த கதை படிக்கும் போது எங்க வீட்டில் இருந்த ராபி என்ற எங்கள் செல்ல நாய் நினைவு எனக்கு வந்தது. எங்க அண்ணன் சிறுபிள்ளையாக இருக்கும்போது இந்த நாயும் எங்க வீட்டிற்கு வந்தது.  பாசமும், அறிவும் கொண்டது அது. நான் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, என் அழுகுரல் கேட்டால் போதும் எங்கே இருந்தாலும் எங்க அம்மாவை அழைத்துக்கொண்டு வரும். பள்ளிக்குப் போகும்போது கூடவே வரும் பள்ளி முடிந்து வரும் பொழுது கேட்டின் அருகே காத்திருக்கும். விளையாடும் போது யாராவது என்னை அடித்து விட்டால் அவர்களை பதம் பார்த்து விடும். உடம்பு சரியாமல் ராபி இறந்த பிறகு அதை புதைத்த இடத்தில் தினமும் பூ வைத்து விட்டு வருவோம். இப்போதும்கூட சொந்த ஊருக்குப் போகும்போது ராபியை  புதைத்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் இள வயது நினைவுகள் கிளர்ந்தெழுந்து விடும். ராபிக்கு பிறகு வேறு எந்த ஒரு நாயையும் என்னால்   வளர்க்கவே முடியவில்லை. 

            ராஜாவும் ராணியும் அந்த வீட்டில் எப்படி வளர்கிறார்கள்? வேட்டைக்கு நாய்களை அழைத்து சென்ற இடத்தில் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. அந்த சம்பவம் என்ன ராஜாவுக்கும் டாமிக்கும் என்னவாயிற்று என்பது தான் கதை..

நல்ல வாசிப்பு அனுபவம் தரும் சிறார் நூல்.

        காலையில் வீட்டில் இருந்து கிளம்பி  மாலை வீடு திரும்பும் வரையிலும் , நம்மைச் சுற்றி நிகழும் அனைத்தையுமே கதைகளாக்க நம்மால் முடியும்.மனிதர்கள் அல்லாத பிறவற்றுடன் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புகளை விட்டுவிட்டு அனேகமாய் நாம் ஒதுங்கி  கொள்கிறோம்.வகுப்பறைகளும் கதை சொல்லும், கதை கேட்கும் பொறுப்புகளை எப்போதோ இழந்துவிட்டு மதிப்பெண் என்னும் மாயச்சுமைக்குள்  சிக்கித்தவிக்கிறது.ஏராளமான  கதைகள் நம்மிடம் இருந்தும் ஏனோ குழந்தைகள் கதைகள் இன்றி பசியோடு தான் ஒவ்வொரு நாளும் தூங்க போகின்றனர். 

    இது போன்ற சிறார் நூல்கள் வாசித்து குழந்தைகளுக்கு மகிழ்வும், அவர்களின் கற்பனை வளமும்,  படைப்பாற்றல்  திறனும் பெருகும். 

-Poonkodi Balamurugan
நூல் : என் பெயர் ராஜா, பக்கங்கள் : 48, விலை : ₹40.00, பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

கருத்துகள் இல்லை: