கண்மணிகுணசேகரனின் ‘வாடாமல்லி’
ஆறு சிறுகதைகள் அடங்கிய சிறுதொகுதி தான். பின்னட்டையில், கண்ணீரின் உப்பு உறைந்த கதைகள்
இவை! என்றிருந்தது. வாசிக்க நுழையும் முன் இந்த பின்னட்டைக்குறிப்பு எனக்குள் சஞ்சலத்தை
வேறு கொடுத்தது. முதல்கதையான அம்போகம் கதையில் 45-க்கும் மேலுள்ள காசிலிங்கம் கதையின்
நாயகன். கூத்தாட்டக்காரர்களின் ஜமாவில் எடுபிடி ஆள். அவன் மனைவி அவனை விட்டுப்போய்
15 வருடங்களாயிற்று. இப்படியான சூழலில் திருமணம் நடந்த நிகழ்வு மற்றும் அவள் ஏன் இவனை
விட்டுப்பிரிந்து போனாள் என்பனவற்றையெல்லாம் மிக நேர்த்தியாய் நமக்கு சொல்கிறார் ஆசிரியர்.
இறுதியில் நடைபெறும் காட்சிகள் யாவும் நாடகத்தன்மையோடு முடிகிறது. இருந்தும் வாசிப்போர்
மனநிலையில் நின்று பார்த்தால் இதுவொரு சோகம் ததும்பும் கதை தான்.
அடுத்த கதையான ’இரும்பு ராசி’கதையும் வாசகனுக்கு சோக நிகழ்வுகளையே
சொல்கிறது. திடீரென என் மனநிலையைப்பொறுத்தவரையில் நான் ஏன் இம்மாதிரியான சோகங்களை மனதில்
ஏற்றிக்கொள்ளவேண்டுமென யோசித்தேன். எல்லா ஜோதிடக்கார்களுமே இரும்பு சம்பந்தமான தொழில்
செய்தால் உங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையும் என்று சொல்லிவிடுவார்கள். நாயகன் பழைய இரும்புப்பொருட்களை
வாங்கி அதற்கு வெங்காயங்களை கிலோ கணக்கில் கொடுக்கிறான். ஒரு காலத்தில் பேரீச்சம்பழமாக
இருந்து காலத்திற்கேற்ப மாறியிருக்கிறது. கண்மணியிடம்
கதையை நகர்த்திச்செல்லும் பாங்கு பக்க வரைவுக்கு உட்பட்டதல்ல. அதுபாட்டுக்கு பிரயாணம்
செய்துகொண்டேயிருக்கும். அது உங்களை வசீகரமாய் கூட்டிச்செல்லும். இந்தக்கதை முடியும்
நான்கு பக்கங்களுக்கு முன்பே நான் இந்த நாயகன் துக்கமடையப்போகிறான் என்று யூகித்தேன்.
போக பின அட்டைக்குறிப்பு அவ்விதம் தானே எனக்குச் சொல்லிற்று!. என்ன செய்யப்போகிறார்?
என்று பார்க்கையில் மிக எளிதாக நாயகனின் சைக்கிள் களவாடப்படுகிறது. படிக்கும் வாசகன்
மீண்டும் மனதில் வருத்தமும் துக்கமும் அடைகிறான்.
ஆக ஒன்றெனக்குப் புரிந்துவிட்டது.
மீதம் இன்னும் 4 கதைகள் மட்டுமே உள்ளன இந்த தொகுப்பில். அதை எப்பாடுபட்டேனும் முடித்துவிடுவதே
சாலச்சிறந்ததென முடிவெடுத்தேன். இதற்காக நான் முன் தயாரிப்புகளில் இறங்கவேண்டியதாயிற்று.
மீதமும் எனக்குள் துக்கத்தைத்தான் விதைக்கப்போகின்றன என்பது உறுதியாகிவிட்டது. இலக்கிய
தொகுப்புகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு கதைகள் இப்படி இருந்தால் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும்
பல கதைகள் இருக்கும். அப்படித்தான் நான் வாசித்திருக்கிறேன்.
பச்சைக்கிளி என்கிற கதையில்
பச்சைக்கிளி என்கிற பெண்ணின் காதலையும், அவள் காதலனின் இறப்பையும், இறுதியில் பச்சைக்கிளியின்
இறப்பையும் சொல்லி முடிக்கிறார். தலைப்புக்கதையான ‘வாடாமல்லி’ தொகுப்பில் மிகச்சிறந்த
கதை. அதிலும் காதலனின் சாவுக்கு கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு தனியே பிரயாணித்து
வந்த மல்லிகா பெரிய மாலையை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் போய் இறங்கி யாரையும் ஏறெடுத்தும்
பாராமல் ஐஸ்பெட்டியில் கிடத்தபட்டவனுக்குச்சென்று மாலையிடுகிறாள். காலத்திற்கு தகுந்த
மாற்றமான கதை. தேர்தலில் நெம்பருக்கு நின்று தோற்றுப்போனவரின் உள்ளக்குமுறல்களையும்
அவரது மனைவி செவுடியின் ஆர்பாட்டமான கொந்தளிப்புகளையும் தாங்கிய கதை ‘வாளி’. இறுதியாக
‘வெட்டுக்காடு’ கதையும் கூட காலத்தின் கதை தான். இன்னமும் கதிர்வேல் மாதிரியான கணவன்மார்கள்
இங்கே காணக்கிடைக்கிறார்கள். மணிமேகலை மாதிரியான பெண்களைக் காண்பது தான் அரிது! இந்தத்தொகுப்பை
வாசிக்க என்ன மாதிரியான மனநிலை ஒரு வாசகனுக்கு இருக்கவேணும்? என்பதில் எனக்கு இப்போதும்
குழப்பம் தான். இருந்தும் கண்மணியின் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு மிகச்சிறந்த
தொகுப்பாக இது இருக்கும்.
வெளியீடு :- தமிழினி. விலை
:- 110. தொடர்புக்கு - 8667255103
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக