சம்பத் யார்? அவரது காலகட்டம்
எழுபதுகளிலா? அவரது வாழ்க்கைக்குறிப்புகள் என்ன? என்கிற தகவல்கள் ஏதுமில்லாமல் ஒரு
தொகுப்பு. அவரது மரணமும் அவரது கதைகளில் குறிப்பிடப்படுவது போன்றே நடந்துள்ளது என்கிற
பின்னட்டை குறிப்பு பூடகமாகவே நமக்குச் சொல்கிறது. சரி அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் என்று
வைத்துக்கொள்வோம்.
இவரது இடைவெளி குறுநாவலை முன்பு
எல்லோருமே சிலாகித்துச் சொல்வார்கள். சாவைப்பற்றியே சொல்லியபடி நகரும் குறுநாவல் அது.
புலியைப்பார்த்து பூனையொன்று கூட கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு செய்து சூடு பட்டுக்கொண்டது.
சமீபத்திய வாசகர்கள் இடைவெளி நாவல் பற்றி பேசுகிறார்களா? என்றால் இல்லை என்று தான்
சொல்ல வேண்டும். தமிழில் கிளாசிக்குகளை மூத்த எழுத்தாளர்களே உருவாக்கி இங்கே நடமாட
விட்டிருக்கிறார்கள் பின்வரும் ஆட்கள் வாசித்து உணருவதற்காக.
என் தந்தையாரின் அடுக்கில்
தெறிகள் என்கிற காலண்டிதழ் இருந்தது. (இந்த புத்தகத்தில் தெறிகள் நாளிதழ் என்று சொல்கிறது.)
அந்த சைசில் அதோடு அப்போதைய சில சிற்றிதழ்கள் சேர்ந்த பைண்டிங் தொகுப்பு அது. அதில்
இவரது ‘உதிர்ந்த நட்சத்திரம்’ என்கிற சிறுகதையை வாசித்து அதுபற்றி தொன்னூறுகளின் ஆரம்பத்தில்
என் தந்தையிடம் பேசினேன். (ரொம்ப பில்டப்பெல்லாம் இல்லீங்கொ) -
-ஏப்பா யாருப்பா இது சம்பத்?
இந்தக்கதையை வித்தியாசமா எழுதியிருக்காரு! என்றேன். அப்படியா? என்று அவரும் அந்த சிறுகதையை
வாசித்துவிட்டு ஆமாம் என்றார். அப்பா சிற்றிதழ் சேகரிப்பாளராக இருந்தாலும் அவைகளுக்கு
சந்தா கட்டி வீட்டு வாசலுக்கே வரச்செய்து விடுவார். வாசிப்பாரா? என்றால் இல்லை என்றுதான்
சொல்லவேணும். ஆனால் பைண்டிங் செய்து பாதுகாப்பதை ஒரு கலையாக வைத்திருந்தார். பின்பாகத்தான்
அவர் தேடியெடுத்து எனக்கு இடைவெளி நாவலை கொடுத்தார்.
என்ன இருந்தாலும் உதிர்ந்த
நட்சத்திரம் சிறுகதையின் ஆழமான பணி அதிலும் இல்லாமல் வீட்டிலேயே தேடினேன். இப்படித்தான்
அஸ்வகோஷ் படைப்புகளை சிற்றிதழ்களில் தேடி வாசித்தேன். அப்படி இவரும் நிறைய எழுதியிருக்க
வாய்ப்பிருக்கிறதென தேடல் தொடர்ந்து தோல்வியில் முடிந்தது. சாமியார் ஜூவுக்குப் போனார்
என்கிற கதையை தேடலில் பிடிக்க முடிந்தது. பின்பாக இப்போது தான் அவரது 9 சிறுகதைகள்
அடங்கிய தொகுப்பை கண்ணுற்றேன். வீடியோ விளையாட்டுப்போட்டி, அலசல் ஆகிய கதைகள் மொழிபெயர்ப்பு
கதைகளை வாசிப்பது போன்ற அனுபவத்தைக் கொடுத்தன.
உதிர்ந்த நட்சத்திரம் சிறுகதையை
என் ஆரம்பகால வாசிப்பில் வாசித்திருந்ததால் கதையையே மறந்திருந்தேன். 30 வருடங்கள் கழித்து
வாசிக்கையில் இன்னமும் இந்தக்கதையின் நகர்வு எனக்குள் சொல்லவொன்னா திருப்தியை கொடுத்தது.
சம்பத் கதைகள் - விருட்சம்
வெளியீடு - விலை - 130. தொடர்புக்கு :- 9444113205, 9176613205.
இடைவெளி நாவலும் விருட்சம்
பதிப்பகத்தில் சம்பத் கதைகள் தொகுதி -2 ல் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக