ஏக்நாத்தின் இரு புத்தகங்கள்


 

ஏக்நாத்தின் படைப்புகள் அவ்வப்போது இணையத்தில் என் கண்ணில் படும். கிராமிய விசயங்களை இவ்ளோ அழகாக சொல்லும் மனிதர் புத்தகங்களாக இவற்றை வெளியிடலாமே! என்று நினைப்பேன். இணையத்தில் இவர் படைப்புகள் நிறைய இருக்கும். என்னால் ஒன்றிரண்டு தான் வாசிக்க முடியும் இணையத்தில். அது இவரது ப்ளாக்ஸ்பாட் என்று நினைக்கிறேன். இந்தமுறை ஈரோடு கண்காட்சியில் இந்த இரண்டு புத்தகங்களை கண்ணுற்றதும் தூக்கிக்கொண்டேன். என்ன இருந்தாலும் புத்தகமாய் வாசிப்பதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது.

 

முதலாக இவரது நாவல் ‘வேசடை’ வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் சுமார் ரகம் தான். நிலப்பட்டா வாங்குவது பற்றி ஒரு கருவை வைத்துக்கொண்டு கிராமிய மனிதர்கள் பலரைச் சொல்கிறார். எனக்கு திருப்தியாகவில்லை.

 

கையோடு ‘ஊர் என்பது ஞாபகமாக இருக்கலாம்’ என்கிற நினைவோடைக்குறிப்புகள் அடங்கிய புத்தகத்தையும் வாசித்தேன். இது மிக அற்புதமான உலகிற்கு அழைத்துச்சென்றுவிட்டது. எல்லாமே கிராமிய மணத்தோடு ஈரமண்ணின் வாசனையை நுகரச்செய்துவிட்டது. வீட்டின் கூரையில் கல் விழுதல் கிராமங்களில் நடக்கும் சமாச்சரங்கள் தான். அதற்கு காரணமாய் பூசாரியிடம் சென்று குறி கேட்டு வீட்டு வாசலைத்தோண்டு தகடு எடுப்பது நடந்து முடிந்த வரலாறுகள். போக கழுதையைப்பற்றி ஆரம்பித்த குறிப்பில் ஒவ்வொரு துணியிலும் குறியிட தேவைப்படும் காய், மற்றும் வெள்ளாவி பற்றியெல்லாம் மிக விபரமாய்ச் சொல்கிறார்.

 

மாட்டின் அழுகை, வம்பளந்தான், வசதி, பூழாத்தி, சாமி கொண்டாடி, கிட்னம்மா எல்லாரையும் மறக்க முடியாது தான் சில மாதங்கள். எல்லாமும் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர்களின் கதைகள்.மஞ்சனக்காரரு மவன் குறிப்பு அவரது மகனை பஞ்சாயத்தில் குற்றமிழைத்ததற்காக நிறுத்துகிறது. திரைப்படங்களில் தான் தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகளை நாம் கண்டிருக்கிறோம். இங்கே ஆளாளிற்கு குற்றமிழைத்தவனை அடித்து விடிகாலை வரை பஞ்சாயத்து நடக்கிறது. விடிந்த பிறகு மஞ்சனக்காரர் சுடுகாட்டுல இருந்த வேப்பை மரத்துல தூக்குல தொங்குறாரு. அதுவரை உம்மென்றே இருந்த மகன் அழுகிறான் என்று முடிகிறது.

 

இப்படி ஒவ்வொரு நினைவுகளும் சிறுகதை வடிவில் முடிவுபெறுகிறது. எல்லா நினைவுகளைப்பற்றியும் நாம் பேசலாம். ஆனால் அது தவறு. தமிழில் அவ்வப்போது நல்ல புத்தகங்கள் வரும். அவற்றை நாம் தேடித்தான் பிடித்து வாசிக்க வேண்டும். இது இரண்டாம் பதிப்பு என்று தகவல் சொல்கிறது.

 

வெளியீடு தமிழ்வெளி - வேசடை -100, ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான் - விலை -160.தொடர்புக்கு _ 9094005600

000

கருத்துகள் இல்லை: